வலி வடக்கு பாதுகாப்பு வலயத்தில் நின்று போயிருந்த இடித்தழிப்பு நடவடிக்கைகள் மீண்டும் நேற்று ஆரம்பமாகி உள்ளது.
கடந்த சில நாட்களாக கமரூனின் விஜயம் மற்றும் இடம்பெயர்ந்த மக்களது போராட்டங்களை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடித்தழிப்பு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக வலி.வடக்கு மீள் குடியேற்றத்திற்கும் புனர்வாழ்விற்குமான அமைப்பின் தலைவர் ச.சஜீவன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இடித்தழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் அதற்கு எதிராக இடம்பெயர்ந்த மக்கள் போராட்டங்களிற்கு தயாராகியிருந்தனர். எனினும் அதனை குழப்பும் வகையில் ஜனாதிபதி இடித்தழிப்பிற்கு தடை விதித்து விட்டதாகவும் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனின் வேண்டுகோளின் பேரில் இப்பணிப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டிருந்தது.
ஆயினும் இடித்தழிப்புக்கள் தொடரப்பட்ட நிலையில் தனக்கு ஜனாதிபதி அதை நிறுத்துமாறான பணிப்பெதனையும் வழங்கியிருக்கவில்லை என யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மஹிந்த கத்துருசிங்க இடம் பெயர்ந்தோர் அமைப்பு பிரதிநிதிகளிடம் கூறியிருந்தார். இந்நிலையில் நின்று போயிருந்த இடித்தழிப்பு நடவடிக்கைகள் தற்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.தற்போது பொதுமக்களது வீடுகளுடன் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாடசாலைகள் மற்றும் இந்து ஆலயங்கள் தேவாலயங்கள் என பலவும் முற்றாக இடித்தழிக்கப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.