மீண்டும் மக்கள் காணிகள் சுவீகரிப்பு

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில், கடந்த காலங்களில் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொது மக்களுக்குச் சொந்தமான 11 யஹக்ரேயர் காணி சுவீகரிக்கப் பட்டு பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளு மாறு, யாழ்.மாவட்ட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் மருதங்கேணி பிரதேச செயலகத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

மருதங்கேணி பிரதேசத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான 11 ஹக்டேயர் காணியை, இராணுவத்தினர் விஜயபாகு ரெஜிமென்ட் படைத்தளம் அமைப்பதற்கு சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை மக்களின் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டிருந்தது.

காணி உரிமையாளர்கள், தமது காணிகளில் எல்லையை நிலஅளவையாளர் திணைக்களத்துக்குக் காட்டவில்லை. ஆயினும் நடைமுறைக்கு மாறாக, காணிகள் எல்லைப்படுத்தப்பட்டு குறித்த காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கான வர்த்தகமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

மஹிந்த அரசின் ஆட்சிக் காலத்திலேயே இது நடைபெற்றது. கடந்த ஆண்டு, ஜுலை மாதம் 3 ஆம் திகதி வர்த்தகமானி அறிவித்தலில் 11 ஹக்ரேயர் காணி சுவீகரிக்கப்படுவதாக, அப்போதைய காணி அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன் கையயழுத்திட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த காணியை, உரிய முறையில் இராணுவத்தினரிடம் கையளிப்பதற்குரிய ஏற்பாடுகள் யாழ்.மாவட்ட காணி சுவீகரிப்பு அலுவரான விக்கிரம கொடவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணி உரிமையாளர்களை அழைத்து இராணுவத்திற்கு காணி கையளிப்பதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, மருதங்கேணி பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில், காணி கையளிப்பு இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில், கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவில் பொதுமக்களின் காணியை இராணுவத் தேவைக்கு சுவீகரிக்க நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 26 ஆம் திகதி சுவீகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த நடவடிக்கை மீளவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவில், திருவையாறு மேற்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே காணி சுவீகரிக்கப்படவுள்ளது. இராணுவத்தின் 20 ஆவது பட்டாலியன் கஜபா ரெஜிமன்டுக்காக இந்தக் காணி சுவீகரிப்படுகின்றது.

5 குடும்பங்களுக்குச் சொந்த மான மேற்படி காணியை சுவீகரிப்பதற்கான வர்த்த மானி அறிவித்தல், கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இதனைச் சுவீகரிப்பதற்காக, கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அன்றைய தினம் குறித்த காணிகளின் உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

ஆனாலும் இராணுவத்தினர் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு வருகை தராத காரணத்தினால் அது ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட சுவீகரிப்பு நடவடிக்கையை மீளவும் மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts