மீண்டும் போலீஸ் வேடத்தில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தன் நண்பர் ஆர்.டி.ராஜாவின் ’24 ஏஎம் ஸ்டியோஸ்’ நிறுவனத்தின் சார்பில் முதல் தயாரிப்பாக உருவாக்கிய ரெமோ படம் அக்டோபர் 7ஆம் தேதி வெளியானது. ரெமோ படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் இருவேறாக கருத்துக்கள் நிலவி வந்தபோதும், வரிசையாக 6 நாட்கள் விடுமுறை தினமாக அமைந்துவிட்டதால் வசூலில் குறைச்சல் இல்லை. தயாரிப்பு தரப்பு முன்கூட்டியே கணித்தபடி ரெமோ படம் பெரிய அளவில் வசூலை குவித்து வருவதாக சொல்லப்படுகிறது.

‘ரெமோ’ படம் வெளியாகி 10 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் 35 கோடிக்கு மேல் வசூலாகியிருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல் அடிபடுகிறது. ரெமோ படத்தைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் இரண்டாவது படத்தை மோகன் ராஜா இயக்கவிருக்கிறார் அல்லவா? சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 11ஆம் தேதி துவங்கவிருக்கிறது.

தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ள சிவகார்த்திகேயன் சென்னை திரும்பியதும் இப்படத்தின் பணிகளில் இணைய இருக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியா, புனே, மும்பை ஆகிய இடங்களில் நடக்கவிருக்கிறது. ‘தனி ஒருவன்’ போன்று சமூக விழிப்புணர்வுள்ள படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். காக்கி சட்டை படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் போலீஸ் வேடத்தில் நடிக்கும் படம் இது.

Related Posts