மீண்டும் நாம் தமிழீழ விடுதலைப் புலிகளை உருவாக்கவேண்டிய தேவை எழுந்துள்ளது – அமைச்சர் விஜயகலா

தமிழர்கள் அனுபவித்துவரும் கொடுமைகளைப் பார்க்கும்போது மீண்டும் நாம் தமிழீழ விடுதலைப் புலிகளை உருவாக்கவேண்டிய தேவை எழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் எட்டாவது நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) யாழ். அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘நாம் மீண்டும் நிம்மதியான வாழ்வினை நோக்கிச் செல்ல வேண்டுமாக இருந்தால், எமது பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமாக இருந்தால் வட.கிழக்கில் மீண்டும் விடுதலைப் புலிகளின் கை ஓங்க வேண்டும்.

நாங்கள் ஜனாதிபதியை தலையால் நடந்து ஜனாதிபதி ஆக்கினோம். ஆனால் அவர் இன்று கட்சியை வளர்த்துக் கொண்டு இருக்கின்றார். எமது மக்களை காப்பாற்ற இல்லை.

கடந்த மூன்று வருடகாலமாக எமது பிரதேசத்தில் எந்த அபிவிருத்திகளும் முழுமையாக இடம்பெறவில்லை. முறையான வகையில் வேலைவாய்ப்புக்கள் பூர்த்தி செய்யப்படவில்லை.

ஒரு வகையில் இந்த அரசாங்கத்திற்கு நன்றி கூறப்படவேண்டும். அதாவது கடந்த முப்பது வருடகாலமாக விடுவிக்கப்படாதிருந்த எமது காணிகளை ஓரளவுக்கேனும் விடுவித்திருக்கின்றார்கள்.

இந்த நிலைமை தொடருமாக இருந்தால் மீண்டும் புலிகளைத் தோற்றுவிப்பதற்கான நிலைமை ஏற்படும். 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் நாம் வாழ்ந்த நிலையினைத் தற்போது நாம் நினைவுகூர்ந்து பார்க்கின்றோம்’ என அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

Related Posts