மீண்டும் தமிழக முதல்வரானார் ஜெயா

அ.தி.மு.கவின் சட்டசபை கட்சித்தலைவர் ஜெயலலிதா ஜெயராம், 5ஆவது தடவையாகவும் தமிழக முதல்வராக பதவியேற்றார்.

அவருக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய இப்பதவியேற்பு விழாவில் ஜெயலலிதாவைத் தொடர்ந்து,28 அமைச்சர்களும் இரண்டு பகுதிகளாக இருந்து பதவியேற்றனர்.

முன்னதாக, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, கடந்த வருடம் செப்டெம்பர் 27ஆம் திகதி முதல்வர் பதவியை இழந்தார்.

இதையடுத்து, புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.

இதற்கிடையே, தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மேன்முறையீடு செய்தனர்.

மேன்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உட்பட 4 பேரையும் கடந்த 11ஆம் திகதி விடுதலை செய்தார்.

இந்தத் தீர்ப்பையடுத்து முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்பதில் இருந்த சட்டப்பூர்வ தடைகள் நீங்கின.

இதனால், அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கின.

அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டப்பேரவை தலைவராக ஜெயலலிதா நேற்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கத்து.

Related Posts