மீண்டும் கொவிட் கொத்தணி உருவாகும் அபாயம் ; பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை

அச்சுறுத்தல் நிலைமைகளுக்கு மத்தியில் நாடு திறக்கப்பட்டுள்ள போதிலும் மக்களின் செயற்பாடுகள் மிக மோசமாக அமைந்துள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதாகவும், நாட்டில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாடங்கள், பேரணிகள் மூலமாக மீண்டும் கொவிட் கொத்தணி உருவாக்கக்கூடிய அதிக வாய்ப்புகள் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

கொவிட் 19 வைரஸ் பரவல் நிலைமைகளுக்கு மத்தியிலும் நாட்டின் செயற்பாடுகள் வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் வைரஸ் தொற்று குறித்து சுகாதார தரப்பின் நிலைப்பாடுகள் மற்றும் அவதானிப்புகள் குறித்து பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவரிடம் வினவிய போதே அவர் இவற்றை தெளிவுபடுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் கொவிட் 19 வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமைகளில் இருந்து நாம் மீளவில்லை என்பதை ஆரம்பத்தில் இருந்தே தெரிவித்து வருகின்றோம்.

சுகாதார சவால்களை விடவும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் காரணமாகவே நாட்டை கட்டுப்பாட்டுடன் திறக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. இது முழுமையாக ஆரோக்கியமான செயற்பாடுகள் என கருதிவிட முடியாது.

எனினும் கடந்த 43 நாட்கள் நாட்டை முடக்கியதன் மூலமாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடிந்தது என்பதை எம்மால் மறுக்கவும் முடியாது. நாம் எடுத்த வேலைத்திட்டத்தில் வெற்றி கண்டுள்ளோம். ஆனால் அச்சுறுத்தல் நிலைமைகளில் இருந்து மீளவில்லை.

உலகையே மோசமாக பாதித்துள்ள, இன்றும் பாதிர்த்துக்கொண்டுள்ள ஒரு வைரஸ் தாக்கத்தில் சகலரும் பாதிக்கப்பட்டுவருகின்ற நிலையில் எம்மால் மட்டும் இவற்றை இலகுவாக வெற்றிகொள்ள முடியும் என கருதுவதே மிகப்பெரிய முட்டாள்தனமாகும்.

எமது சுய பாதுகாப்பே வைரஸ் தொற்றில் இருந்து எம்மால் காப்பாற்றும். எனினும் இவ்வாறான அச்சுறுத்தல் நிலையில் நாட்டில் பல்வேறு மோசமான செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டுள்ளதை நாம் அவதானித்து வருகின்றோம்.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் மற்றும் மக்களின் அனாவசிய செயற்பாடுகள் காரணமாக மீண்டும் கொவிட் வைரஸ் தொற்றுப்பரவல் ஏற்பட அதிக சாதகத்தன்மைகள் ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

தமது நியாயமான கோரிக்கைகளை முன்னெடுத்து விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து போராடுகின்றனர். அதேபோல் பெற்றோர் அரசியல்வாதிகள் என பலர் நாட்டில் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

அவர்களின் பக்கம் இது நியாயமானதாக இருக்கும், அதனை எம்மால் விமர்சிக்க முடியாது. ஆனால் இவ்வாறு முன்னெடுக்கும் சகல போராட்டங்களை அவதானித்த போது அனைவருமே சுகாதார வழிமுறைகளை முழுமையாக மீறி, கொவிட் வைரஸ் பரவல் குறித்த அச்சுறுத்தலை கருத்தில் கொள்ளாது, ஏனைய மக்கள் குறித்து சிந்திக்காது செயற்பட்டுக்கொண்டுள்ளனர்.

அதேபோல் பொது போக்குவரத்து செயற்பாடுகளும் மிக மோசமாக அமைந்துள்ளது, குறுகிய தூர பேருந்து சேவைகள் மற்றும் பொது போக்குவரத்துகளில் மக்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிச்செல்லும் நிலைமை உள்ளது.

முகக்கவசங்கள், சமூக இடைவெளி என்ற எதுவமே பொதுமக்களால் கடைப்பிடிக்கப்படுவதை அவதானிக்க முடியவில்லை. சுற்றுலா செல்கின்றனர், சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதில்லை. இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக மீண்டும் நாட்டில் கொவிட் வைரஸ் பரவக்கூறிய அச்சுறுத்தல் நிலைமை உள்ளது.

நாடு திறக்கப்பட்டுள்ள போதிலும் கொவிட் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமை உள்ளது. மீண்டும் வேகமாக கொவிட் வைரஸ் பரவக்கூடிய அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனை மறுக்க முடியாது.

மீண்டும் ஒரு கொவிட் கொத்தணி உருவாகினால் மிக மோசமான தாக்கத்தை அது வெளிப்படுத்தும். அதேபோல் புதிய வைரஸ்கள் பரவினால் அதன் தாக்கமும், வெளிப்பாடும் மோசமாக அமையும் எனவும் அவர் கூறினார்.

Related Posts