மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம்!!! : பிரதமர்

எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) பிரதமர் மீதான கேள்வி நேரத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

‘ஈரானின் மீதான பொருளாதார தடையை அமெரிக்கா மேலும் விரிவுப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் எரிப்பொருள் விலைகளும் அதிகரிக்க கூடிய அபாயம் உள்ளது.

ஈரானில் இருந்தே அதிகளவில் எரிப்பொருள்களை கொண்டு வருகின்றோம். ஆகவே இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்தி துரித ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இது தொடர்பிலும் அரசாங்கம் என்ற வகையில் நாம் ஆராய்ந்து வருகின்றோம்.

அதேபோன்று சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான முறுகல் நிலைமையின் தாக்கத்தினாலும் இலங்கைக்கு அதிகளவிலான பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆகவே இவை அனைத்து அனுசரித்து நாம் செல்ல வேண்டும்.

அத்துடன், 1000 என்ஜின் இயலளவுக்கு குறைந்த கார்கள் மீது விதிக்கப்பட்ட வரித்தொகையில் திருத்தம் செய்வது தொடர்பில் எதிர்வரும் காலங்கள் மீள்பரிசீலனை செய்யப்படும்’ என தெரிவித்துள்ளார்.

Related Posts