அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக, அளித்த வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றத்தவறியதால், எதிர்வரும் 08 ஆம் திகதி அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் என வாக்குறுதி அளித்து தமிழ் மக்களிடம் வாக்குகளை பெற்ற போதிலும், இன்று வரை அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. அதேவேளை, கடந்த வருடம் டிசம்பர் மாதம் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்ட போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியை நான் நம்புகின்றேன். நீங்கள் எங்களை நம்புங்கள் என்று வாக்குறுதி அளித்து உண்ணாவிரதத்தினை நிறைவு செய்யுமாறு வலியுறுத்தியிருந்தார்.
ஆனால், இதுவரையில் அந்த வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. குறித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் தமது உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளதாக அரசியல் கைதிகள் முடிவு செய்துள்ளனர். உண்ணாவிரத போராட்டம் சம்பந்தப்பட்ட கடிதமும், சிறைச்சாலை ஆணையாளருக்கும் அரசியல் கைதிகள் கையளித்துள்ளனர்.
அரசியல் கைதிகளின் நிலைமை தற்போது வரைக்கும் மாறாத காரணத்தினாலும், வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றமடைந்து விட்டதாகவும் அரசியல் கைதிகள் கவலை தெரிவித்துள்ளனர். உண்மையான நல்லிணக்கம் உருவாக்கப்பட வேண்டுமாயின் அரசியல் கைதிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு, அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். அவ்வாறு விடுதலை செய்யாமல் அரசியல் கைதிகள் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதியின் வாக்குறுதிகளில் நம்பிக்கையற்ற நிலைமை இருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாபதிபதி கைதிகளின் விடுதலையினை விரைவாக செய்வேன் என்று கூறியுள்ளார். அது இதுவரையில் சரிவர நிறைவேற்றப்படவில்லை. உண்மையான நல்லிணக்கத்திற்கு கைதிகளின் விடுதலையே சிறந்த ஒரு முயற்சியாக அமையும் என்றும் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளதுடன், அன்றைய தினம் வெலிகட சிறைச்சாலைக்கு முன்பாகவும் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்பாகவும்அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.