மீண்டும் இணைந்த கூட்டணிக்கு எதிர்பார்ப்பு!

சினிமா என்பதே கூட்டு முயற்சிதான். வெற்றியடையும்போது இந்த உண்மையை ஏற்க மறுக்கின்றனர். வெற்றிக்கு நாமே காரணம் என்று நினைக்கின்றனர். அதனால் பல வெற்றிக்கூட்டணிகள் உடைந்திருக்கின்றன. இப்படி உடைந்த வெற்றிக்கூட்டணியில் ஒன்று.. இயக்குநர் செல்வராகவன் – இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா.

uvan-selva-ragavan

துள்ளுவதோ இளமை தொடங்கி புதுப்பேட்டை வரை இந்த கூட்டணி வெற்றியடைந்தது. 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி ‘புதுப்பேட்டை’ படத்தின் பாடல்கள் வெளிவந்தன. 2006 ஆம் ஆண்டு ‘புதுப்பேட்டை’ படம் திரைக்கு வந்தது. இப்படத்தின் வரவேற்புக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று யுவன் ஷங்கர் ராஜாவின் சூப்பர்ஹிட் பாடல்களும், மிரட்டலான பின்னணி இசையும்தான். இப்படத்திற்குப் பிறகு செல்வராகவன் இயக்கிய படங்களுக்கு யுவன் இசையமைக்கவில்லை.

தற்போது 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திற்காக இந்த கூட்டணி இணைந்திருக்கிறது. இப்படத்தின் பாடல்களை இன்று வெளியிடவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

செல்வராகவனின் முதல் 4 படங்களுக்குமே சூப்பர்ஹிட் பாடல்களைத் தந்தவர் யுவன். இதனால் ரசிகர்கள் மத்தியில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது. தவிர இப்படத்தின் டிரைலரில் இடம்பெற்ற ‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா…’ பாடல் ஏற்கெனவே வைரல் ஹிட்டாகியிருக்கிறது. அதோடு, இப்படத்தில் நடிகர் தனுஷும் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

Related Posts