‘பிரபாகரனை நான் ‘மிஸ்டர் பிரபாகரன்’ என்று சொன்னதாக எனக்கு எதிராக சேறு பூசுகிறார்கள். மஹிந்த ராஜபக்ஷவும் பிரபாகரனை ‘மிஸ்டர் பிரபாகரன்’ என்று கூறியிருக்கின்றார். அவரது உத்தியோகபூர்வ இணையதளத்திலும் அவ்வாறே காணப்படுகின்றது’ என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ‘நாம் ஒருபோதும் இந்த நாட்டை பிளக்க இடமளிக்க மாட்டோம். நாம் புலிகளுக்கு எதிராக போராடியவர்கள். எமது ஆட்சிக்காலத்தின் போதே யாழ்ப்பாணம் மீட்கப்பட்டது. புலிகளைக் தூக்கி நாம் மடியில் வைத்துக்கொள்ளவில்லை. தோல்விப் படியில் விழுந்துள்ள இந்த அரசாங்கம் தற்போது பொய்ப் பிரசாரங்களில் ஈடபட்டு வருகின்றது. இந்த நாட்டை பிளவுபடுத்துமளவுக்கு எமக்கு பைத்தியம் இல்லை’ என்றார்.
‘பிரபாகரனை நான் ‘மிஸ்டர் பிரபாகரன்’ என்று சொன்னதாக எனக்கு எதிராக சேறு பூசுகிறார்கள். ஆண், பெண் என்ற வித்தியாசத்தை உணர்த்துவதற்காகவே ஆங்கிலத்தில் மிஸ்டர், மிசிஸ் என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. பிரபாகரன் என்ற சொல்லை நான் எனது உரையில் மூன்று முறை பயன்படுத்தினேன். முதன்முறை அச்சொல்லைக் கூறும்போதே மிஸ்டர் என்ற சொல்லையும் இணைத்துக்கொண்டேன். அப்போது கூட நான் அந்த சொல்லை கிண்டலாகவே சொன்னேன். மிஸ்டர் என்பதற்கு திரு என்பது மட்டும் அர்த்தம் இல்லை’ என்றார்.
‘மஹிந்த ராஜபக்ஷவும் பிரபாகரனை ‘மிஸ்டர் பிரபாகரன்’ என்று கூறியிருக்கின்றார். அவரது உத்தியோகபூர்வ இணையதளத்திலும் அவ்வாறே காணப்படுகின்றது’ என சந்திரிகா குமாரதுங்க மேலும் கூறினார்.