மிருக பலிக்கு எதிரான நீதிமன்றத் தடை நீடிப்பு!

உயிர் காப்பது தர்மம். உயிர் எடுப்பது கர்மம். தர்மம் தலைகாக்கும் என்பார்கள் நீதிமன்ற தர்மம் ஆடுகளின் தலைகளைக் காக்கட்டும் என தெரிவித்துள்ள யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், ஆலயங்களின் வேள்விகளில் மிருகபலி கொடுப்பதைத் தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி வரை நீடித்துள்ளார்.

ஆலயங்ளில் மிருகபலி கொடுப்பதைத் நிறுத்துவதற்குத் தடை ஆணை கோரி அகில இலங்கை இந்து மசா சபையின் தலைவர் சிவக்கொழுந்து சோதிமுத்து தடையீட்டு எழுத்தாணை மனு ஒன்றை யாழ்.மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

வலிகாமம் வடக்கு வலிகாமம் தெற்கு, வலிகாமம் தென்மேற்கு, வலிகாமம் மேற்கு மற்றும் கோப்பாய் பிரதேசசபைகளின் செயலாளர்கள், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், தெல்லிப்பழை, சங்கானை, உடுவில், சண்டிலிப்பாய், கோப்பாய் ஆகிய பிரதேசங்களின் சுகாதார வைத்திய அதிகரிகள் மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் ஆகியோரை இந்த மனுவில் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

மிருக பலி கொடுக்கும் வேள்விக்கு ஏன் நிரந்தர தடை ஆணை பிறப்பிக்கக் கூடாது என எதிர் மனுதாரர்களுக்கு அறிவித்தல் வழங்குமாறும் இந்த மனுவில் மனுதாரர் கோரியிருந்தனர்.

இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிபதி கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி ஆலயங்களில் மிருக பலி கொடுப்பதற்கு எதிராக உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அத்துடன், ஆலயங்களில் மிருக பலிகொடுத்து வேள்வி நடத்தப்படுவதற்காகக் குறிக்கப்பட்டிருந்த திகதியில் சம்பந்தப்பட்ட ஆலயங்களின் சுற்றாடலில் பெரும் எண்ணிக்கையான பொலிசாரைக் கடமையில் ஈடுபடுத்தி, மிருக பலி நடவடிக்கையை நீதிமன்றம் தடுத்திருந்தது.

பலியிடுவதற்காக ஆலயங்களுக்குக் கொண்டு வரப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான ஆடுகள் பலியிடப்படுவதைத் தடுத்து, அவற்றை வீடுகளுக்குக் கொண்டு செல்லும் நடவடிக்கையிலும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்த விடயம் தொடர்பான வழக்கு கடந்த 13 ஆம் திகதி மீண்டும் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

அப்போது, எதிர மனுதாரர் தரப்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி, மிருக வேள்வி கடந்த 300 ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வருவதாகவும், அதனை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என இடைபுகு வாதம் செய்தார்.

அகில இலங்கை இந்து மகா சபையின் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி மிருக வேள்வி பலியை அனுமதிக்கக் கூடாது எனவும் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறுவதனால், இடைக்காலத் தடை கட்டளையை நீடிக்குமாறும் மன்றைக் கோரினார்.

இதனையடுத்து, ஆலயங்களில் மிருக பலி கொடுக்கலாமா, கூடாதா என சுமார் 45 நிமிடங்கள் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றன.

இரு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி இளஞ்செழியன் அந்த விசாரணையின்போது தெரிவித்ததாவது

யாழ்.குடாநாட்டில் 90 வீதமான கோவில்களில் மிருக வேள்வி பலி நிறுத்தப்பட்டுள்ளது. பத்து வீதமான கோவில்களில் மட்டுமே மிருக வேள்வி பலி பூஜை நடைபெறுகின்றது. எனவே இது அனைத்து இந்து மக்களின் மத உரிமை என வாதம் செய்வது ஏற்புடைத்தல்ல.

இந்த இடைக்காலத் தடை உத்தரவு சித்திரை மாதத்தில் இருந்து நடைமுறையில் இருந்து வருகின்றது. இக்காலப் பகுதியில் இந்த நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவுக்கு மதிப்பளித்து, மிருக வேள்வி பலி பூஜைகள் அனைத்து கோவில்களிலும் நிறுத்தப்பட்டன.

இருப்பினும் இளவாலை பிரான்பற்று கோவிலில் 300இற்கும் மேற்பட்ட பொலிஸார் நடு நிசி ஒன்றரை மணியளவில் கடமையில் நிறுத்தப்பட்டிருந்தனர் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும். இடைக்கால தடை உத்தரவை மீறி ஆலயங்களில் மிருக பலி செய்தால் அனுமதியில்லாமல் இறைச்சி வெட்டியமைக்காக கைது செய்து நீதிவான் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்டவர்களை முற்படுத்துமாறு பொலிசாருக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது,

அவ்வாறு கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

ஸ்ரீ இராமபிரான் காலத்தில் அஸ்வமேதை குதிரை யாகம் நடத்தப்படுவது வழக்கம். அதில் யாக பூஜையில் முன் நிறுத்தப்படும் குதிரை பலியிடப்படும். அதனை ஸ்ரீ இராமபிரான் அக்குதிரை பலியிடப்படுவது தவறான விடயம் என மக்களுக்கு விளக்கிக் கூறி, அஸ்வமேதை யாகத்தில் குதிரை பலியிடப்படுவது அன்றிலிருந்து நிறுத்தப்பட்டது என இதிகாச வரலாறுகள் உண்டு

இப்போது நடப்பது கலியுகம். சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, சட்ட ஆட்சிக்குக் கட்டுப்பட்டே காரியங்கள் இடம்பெற வேண்டும். புராண இதிகாச வரலாறுகள் என கூறி, தற்சமயம் காரியங்களைத் தொடர முடியாது.

இந்து கோவில்களில் வேள்வியின்போது, மிருக பலி கொடுப்பதற்கு இறைச்சிக் கடை சட்டத்தின் கீழ் பிரதேச சபை அனுமதி வழங்குவதா என்பதே இந்த வழக்கின் முக்கிய கேள்வியாகும். .

இறைச்சிக் கடை சட்டத்திற்கும் இந்து சமபத்திற்கும் என்ன தொடர்பு? இறைச்சிக் கடை சட்டத்திற்கும் மிருக வேள்வி பலிக்கும் என்ன தொடர்பு? இந்து சமய இதிகாசம் மற்றும் புராண வரலாறு வழக்காறுகளில் இறைச்சிக் கடை சட்டத்தின் கீழா மிருக வேள்வி பலி பூஜை நடைபெற்றது? இந்துக் கோவில் மிருக பலி வேள்வி பூஜைக்கு இறைச்சிக் கடை சட்டத்தின் கீழ் அனுமதி பெறுவது சட்டரீதியானதா? அது நியாயமானதா? மத உரிமைக்கும் மத உரிமையை நிலைநாட்டுவதற்கும் இறைச்சிக் கடை சட்டத்திற்கும் என்ன தொடர்பு? இது இந்து சமயத்தை அவமானப்படுத்தும் செயலாகுமா? இது போன்ற விடயங்களும் இந்த வழக்கின் விசாரணைக்கு முக்கியம் பெற்றிருக்கின்றன. உயிர் காப்பது தர்மம். உயிர்களைப் பலி எடுப்பது கர்மம். வாய்பேசா ஆடுகளின் இரத்தம் ஆலயங்களில் ஓடவேண்டுமா? அது தர்மமாகுமா? தர்மம் தலைகாக்கும் என்பார்கள். இந்த நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவு, அப்பாவி ஆடுகளின் தலைகளைக் காக்கட்டும் என தெரிவித்த நீதிபதி இளஞ்செழியன், ஆலயங்களின் வேள்விகளில் மிருக பலி கொடுப்பதற்கு எதிரான தடை உத்தரவை ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரை நீடித்து விசாரணையை ஒத்தி வைத்தார்.

Related Posts