யாழ் குடாநாட்டில் உள்ள கோவில்களில் மிருக வேள்விக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி வரையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி அந்தத் தடையுத்தரவை இந்த வழக்கு விசாரணை முடிவடையும் வரை நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ் குடாநாட்டு கோவில்கள் சிலவற்றில் விலங்குகள் வெட்டி, நடத்தப்படும் வேள்விகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அகில இலங்கை சைவ மகாசபை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி யாழ் மேல் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கு மீண்டும் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையின்போது இடம்பெற்ற காரசாரமான வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதிவரையில் இந்தத் தடையுத்தரவை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நீடித்து உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து ஆகஸ்ட் 10 ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் இந்த வழக்கு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இந்த வழக்கு முடியும் வரையில் கோவில்களில் மிருக வேள்விகளைத் தடைசெய்யும் உத்தரவை நீடித்ததுடன், வழக்கு விசாரணையை ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.