எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் மின்சார சபை எதிர்கொண்டுள்ள பாரிய நிதி நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் வகையில் மின் பாவணைக் கட்டணங்களை அதிகரிக்க மின்சக்தி எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
குறைந்தளவு மின்சாரத்தை பயன்படுத்தும் மக்களுக்கு அதிக சுமை ஏற்றாத வகையில் கட்டணத்தை உயர்த்துவதற்கு மின்சாரசபை, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு சிபார்சு செய்துள்ளதாக அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.
மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பில் இன்று முதல் பொதுமக்களின் கருத்தை அறிந்த பின் ஏப்ரல் மாதம் முதல் அதிகரிக்கப்படவுள்ள இந்த கட்டண உயர்வு தற்காலிகமானதாகவே அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார சபை உத்தேசித்துள்ள புதிய கட்டண அதிகரிப்பின் படி மாதாந்த நிலையான கட்டணம் மாற்றப்படமாட்டாது. முதல் 30 அலகுகளுக்கான கட்டணம் 3 ரூபாவில் இருந்து 5 ரூபாவாகவும் 60 அலகு வரையான கட்டணம் 4 ரூபா 70 சதத்திலிருந்து 6 ரூபாவாகவும் உயர்த்தப்படவுள்ளதாக மின்சாரசபை தெரிவித்துள்ளது.
மேலும் 90 அலகுகளுக்கான கட்டணம் ஒவ்வொரு அலகிற்கும் தலா ஒரு ரூபாவினாலும் அதிகரிக்கிறது. 120 அலகுகள் வரையான கட்டணம் தலா 6 ரூபாவினாலும் 180 அலகுகள் வரையான கட்டணம் 4 ரூபாவினாலும் 210 அலகுகள் வரையான கட்டணம் எட்டு ரூபாவினாலும் குறைக்கவும் தீர்மானிக்கப்படவுள்ளது.
புதிய கட்டண திருத்தத்தில் மதஸ்தலங்கள், பாடசாலைகளுக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை எனவும் ஹோட்டல்கள், கைத்தொழில் நிலையங்களுக்கான கட்டணங்களில் சிறிய அதிகரிப்புக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதுடன் இந்த வருட முடிவு வரை எக்காரணம் கொண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது எனவும் மின்சார சபை அறிவித்துள்ளது.
குறைந்த அலகுகள் பயன்படுத்துவோருக்கு வழங்கும் குறைந்த அலகுக் கட்டணங்கள், கூடுதலாக பயன்படுத்துபவர்களுக்கும் வழங்கப்படுவதை திருத்தும் வகையிலேயே கட்டணம் திருத்தப்படுவதாகவும் கட்டணம் உயர்த்தப்படுகின்ற போதும் பாவனையாளர்களுக்கு வழங்கும் நிவாரணம் நிறுத்தப்படாது எனவும் மின்சார சபை கூறியுள்ளது.
கைத்தொழிற்துறைக்கு வழங்கும் நிவாரணம் 26 பில்லியனாகவும் மதஸ்தலங்களுக்கு வழங்கும் நிவாரணம் 1.2 பில்லியனாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண மின் பாவனையாளருக்கு வழங்கும் நிவாரணம் 12 பில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு மின் அலகிற்கு மின்சார சபை தலா 22.85 ரூபா செவிடுகிற போதும் பாவனையாளர்களுக்கு 16.20 ரூபா நஷ்டத்திற்கே வழங்கப்படுவதாகவும் மின்சார சபை கூறுகிறது.