மின்னழுத்தியுடன் காரியாலயம் சென்ற யுவதி

நவீனமான மடிக்கணினி, ஐபேட் மற்றும் விலையுயர்ந்த அலைபேசிகளுடன் காரியாலயத்திற்கு செல்லவேண்டிய இன்றைய காலக்கட்டத்தில் மின்னழுத்தியுடன் (அயன் பொக்ஸ்) காரியாலயத்திற்கு செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை நகர்புறங்களில் தங்கியிருந்து காரியாலயங்களுக்கு செல்வோருக்கு குறிப்பாக பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது எனலாம்.

வேலைத்தளங்கள், காரியாலயம், வீடு, பஸ்கள் மற்றும் பொது இடங்களில் பெண்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றனர். சில விடயங்களை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறுகின்ற சந்தர்ப்பங்களும் பெண்களுக்கு இல்லாமல் இல்லை.

பொருளாதார கஷ்டத்தினால் வீட்டிலிருக்காமல் பெண்கள் வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தாம் வாழுகின்ற பிரதேசத்தில் ஊதியத்துக்கும் கற்ற கல்விக்கு ஏற்பவும் வேலை கிடைக்காமையினால் ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் கொழும்பு, கண்டி உள்ளிட்ட நகரங்களுக்கு படையெடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஏதோவொரு வகையில் வேலை கிடைத்தாலும் தங்குவதற்கு தங்குமிடம் தேடுவது சிரமத்திலும் சிரமமாகும். தங்குமிட வசதிகள் (போடிங்) கிடைத்தாலும் ஏகப்பட்ட கெடுபிடிகள், ஆனால், உரிய திகதியில் பணத்தைமட்டும் சுளையாக வாங்கிகொள்வர், தங்கியிருப்பவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளை தங்குமிடம் கொடுப்போரில் சிலர் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. சில தங்குமிடங்களில் பெண்களின் ஆடைகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

சில தங்குமிடங்கள் வசதிவாய்ப்புடன் கெடுபிடிகள் இன்றி இருந்தாலும் அங்கிருக்கின்ற ஆண்களின் சேஷ்டையை தாங்கிகொள்ள முடியாதாம். தங்களுடைய வீடுதானே என்ற நினைப்பில் இளம் பெண்கள் தங்கியிருக்கும் அறைக்குள் ஆண்கள் சென்றுவிடுகின்ற சந்தப்பங்களும் இல்லாமல் இல்லை. இவையெல்லாவற்றையும் பொறுத்துகொண்டுதான் வேலை செய்யவேண்டிய நிலை பெண்களில் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த யுவதியொருவர் கொழும்பில் தங்கியிருந்து தொழில் புரிகின்றார். தான் தங்கியிருக்கும் வீட்டின் சொந்தக்காரருக்கு தன் வயதில் பெண்பிள்ளையொன்று இருந்தாலும், அங்கிருக்கின்ற முதியவரின் கெடுபிடிகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று அப்பெண் அடிக்கொருதடவை அங்கலாய்த்துகொள்வார்.

இரவு 10 மணிக்கு மேல் மின்விளக்குகளை ஒளிரவிடக்கூடாது. ஆடைகளை அயன்பண்ணக் கூடாது என்பது அந்த கெடுபிடிகளில் சிலவாகும். ஆனால், காரியாலயத்தில் கடமையாற்றும் அப்பெண், நேர்த்தியாக ஆடையணிய வேண்டும் என்பதனால், வீட்டிலிருந்து களவாக அயன் பொக்ஸ் கொண்டுவந்து தான் தங்கியிருக்கின்ற அறையில் மறைத்துவைத்துள்ளார்.

அந்த வீட்டின் முதியவரோ, பெண்கள் தங்கியிருக்கும் அறைகளை நோட்டமிடுவதில் படு கிள்ளாடியாம். அதேபோல், இன்று காலையும் யுவதியொருவர் தங்கியிருக்கும் அறையை தட்டியுள்ளார். என்னசெய்வதென்று தெரியாத அந்த யுவதி, ‘அங்கிள் நான் உடுத்திகொண்டிருக்கின்றேன் என்ன விஷயம்?’ என்று கதவை திறக்காமல் ஒருவாறு சமாளித்து அங்கிளை அனுப்பிவிட்டார்.

அங்கிள் ஐயன் பொக்ஸ் விவகாரத்தை கேள்விபட்டுதான் தன்னறையைத் தட்டியிருக்க வேண்டும் என்று யூகித்துகொண்ட அந்த யுவதி, சூடாக இருந்த ஐயன் பொக்ஸை மின்விசிறியினால் உலர்த்தி, அறையிலிருந்த பேக்கொன்றில் சுற்றி தன்னுடைய ஹேன்பேக்கில் போட்டுக்கொண்டு காரியாலயத்திற்கு சென்றுள்ளார்.

கேட்க விசித்திரமான சம்பவமாக இருந்தாலும், இதுதான் இன்று நகர்புறங்களில் வாடகைக்கு தங்கியிருந்து வேலை செய்யும் இளைஞர், யுவதிகளின் யதார்த்த நிலைமையாகும்.

Related Posts