சமூக வலைத்தளங்களை தொடர்ந்து ஏனைய வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல்களையும் கட்டுப்படுத்துவதற்கும், ஒழுங்கு முறைகளை நடைமுறைப்படுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற பாதுகாப்பு அதிகாரிகளுடனான சந்திப்பின்போதே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தியதன் மூலம் நாட்டில் நிலவிய இனங்களுக்கிடையிலான மோதலை பாரிய அளவில் கட்டுப்படுத்த முடிந்ததாக குறித்த சந்திப்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் கடந்த காலங்களில் அசாதாரண சூழ்நிலை நிலவிவந்த நிலையில், குழப்பங்களை தோற்றுவிக்கும் வகையிலான போலிப் பிரசாரங்களை தடுக்கும் வகையில் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.