மழை பெய்த போதிலும் மின்னுற்பத்திக்கான நீரேந்து பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி இடம்பெறவில்லை என்று மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்திலிருந்து எதிர்வரும் 6 மாத காலப்பகுதிக்கான மின் உற்பத்திக்கு மேலதிகமாக 51 பில்லியன் ரூபா செலவிட வேண்டி ஏற்படுமென்று மின்சார சபை கணக்கிட்டுள்ளது.
இந்த செலவுத் தொகை பாவனையாளர்கள் மீது சுமத்தப்பட மாட்டாது. ஆரசாங்கமே இதனை பொறுப்பேற்கும். மாலை 6.30ற்கும் இரவு 10.30ற்கும் இடையிலான காலப்பகுதியில் மேலதிக செயற்பாடுகளுக்காக மின்சாரத்தை பயன்படுத்துவதில் சிக்கனத்தைக் கையாளுமாறு மின்சார சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 1.6 சதவீதத்தினால் மாத்திரமே அதிகரித்துள்ளது. இதற்கமைவாக, தற்போது நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 32.6 சதவீதமாக அமைந்திருப்பதாக அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளரும், ஊடக பேச்சாளருமான சுரக்ஷன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் காலநிலையின் கீழ் வார நாட்களில், மின்சாரத் தேவை மணித்தியாலத்திற்கு 40 கிகாவொட்ஸ்சாக அமைந்துள்ளது. பெருமளவில் மின்சார உற்பத்தி அனல்மின் நிலையங்கள் மூலமே மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. தேவையான மின்சாhரத்தில் 90 முதல் 92 சதவீதமானவை அனல் மின் உற்பத்தி மூலமே உற்பத்தி செய்யப்படுகின்றது அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளரும், ஊடக பேச்சாளருமான சுரக்ஷன ஜயவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.