மாவை சேனாதிராஜா முதலமைச்சராவதை இந்தியா விரும்பவில்லை: ஏசியன் ரிபியூன்

mavai mp inஇலங்கையின் வடக்கு மாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவின் பெயர் பரிசீலிக்கப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்று ஏசியன் ரிபியூன் இணைத்தளம் தெரிவித்துள்ளது.

இணையத்தளத்தின் ஆசிரியர், தமது ஆசிரியர் தலையங்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்திய உளவு நிறுவனமான ரோ, மாவை சேனாதிராஜாவின் மீது குற்றச்சாட்டை சுமத்தி இந்திய அரசாங்கத்துக்கு அறிக்கை ஒன்றை அளித்துள்ளது.இதன்படி, 2004ம் ஆண்டில் மிதவாத தமிழ் தலைவர்களை மாவை சேனாதிராஜாவே விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்திவிட்டார்.

இந்தியா எச்சரித்தபோதும் மாவை சேனாதிராஜா, இந்த விடயத்தில் மும்முரமாக இருந்ததாக ரோ குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோரின் கொலைகள் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் சிவசிதம்பரத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு போன்ற சம்பவங்களின் பின்னணியில் மாவை சேனாதிராஜா செயற்பட்டுள்ளார் என்று ரோ குறிப்பிட்டுள்ளதாக ஏசியன் ரிபியூன் தெரிவித்துள்ளது.

அத்துடன், புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளும் மாவை சேனாதிராஜா முதலமைச்சர் வேட்பாளராக தெரிவுசெய்யப்படுவதை ஏற்கவில்லை என்று ஏசியன் ரிபியூன் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், திருகோணமலையை சேர்ந்த இளைப்பாறிய நீதியரசர் சி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக பெயரிட யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

எனினும் விக்னேஸ்வரனின் மகன் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் உறவுவழிப் பெண்ணை மணம் முடித்துள்ளார் என்றும் ஏசியன் ரிபியூன் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில் கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் வி.டி.தமிழ்மாறன் மற்றும் பேராசிரியர் சிற்றம்பலம் ஆகியோரின் பெயர்களும் முதலமைச்சர் வேட்பாளர்களுக்காக பிரேரிக்கப்பட்டுள்ளதாக ஏசியன் ரிபியூன் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக முதலமைச்சர் வேட்பாளர் நிலையில் பிரச்சினைகள் இல்லாத போதும் ரோவின் தலையீட்டின் பின்னர் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளர் நிலையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக ஏசியன் ரிபியூன் தெரிவித்துள்ளது.

Related Posts