வட மாகாண சபைத் தேர்தல் வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கு அனைத்து கட்சிகளின் அங்கிகாரமும் வேண்டும் எனவும் எழுந்தமானத்திற்கு கூட்டமைப்பில் இருக்கும் ஒரு கட்சி முடிவெடுத்தால் அது குழப்பத்தில் முடியும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் அமைந்துள்ள ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவை முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்ய வேண்டும் என்று தமிழரசுக் கட்சி யாழ் கிளை அக்கட்சியின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும் தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னரே முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் முடிவெடுக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பு ஐந்து கட்சிகளின் கூட்டு இதில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியின் யாழ். கிளை அறிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என சுரேஸ் பிரேமச்சந்திரன் சுட்டிக் காட்டியுள்ளார்.
மாவை சேனாதிராசா இதில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் என்று நான் சொல்லவில்லை. இருந்தாலும் இந்த விடயத்தில் அனைவரின் கருத்துக்களும் அறிய வேண்டியது முக்கியமானது என அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு ஒரு கட்சி அறிவிக்கும் போதும் ஏனைய கட்சிகளும் தங்களுக்கு விரும்பி வேட்பாளர்கள் அறிவித்தால் குழப்பம் தான் ஏற்படும். நாங்கள் பூதகரமான சத்திகள் என்று தமிழரசுக் கட்சி தன்தோன்றித்தனமாகச் செயற்படக்கூடாது எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார்.
கூட்டமைப்பு அங்கம் வகிக்கும் ஒரு கட்சி தனது கட்சி சார்பானவரை பிரேரிப்பது அது அந்த கட்சி சார்பானதாகவே இருக்கும். அவ்வாறு ஒரு வேட்பாளரைத் தெரிவு செய்யவதென்றால் கூட்டமைப்பின் அங்கிகாரம் பெறவேண்டும் கூட்டமைப்புடன் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.