மாவையே முதலமைச்சர் வேட்பாளர்: சிவஞானம்

mavai mp inஎதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவை நிறுத்த இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலின் வேட்பாளர் தெரிவுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழரசுக் கட்சியின் யாழ். கிளையில் நடைபெற்றது.

இதன்போது, எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனதிராசாவை நிறுத்துவதற்கு யாழ். கிளை தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு பதிவுத் தபால் மூலம் இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கும் அனைத்து கட்சிகளுடனும் ஒன்றிணைந்து செயலாற்றக் கூடியவர் என்ற ரீதியிலும் வடக்கு, கிழக்கு மக்களின் ஆதரவு அவருக்கு இருக்கின்றது என்ற வகையிலும் மாவை சேனாதிராசாவை தெரிவு செய்துள்ளோம்.

இந்த தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் ஏனைய கட்சிகள் குறிப்பாக ரெலோ, ஈபிஆர்எல்எப், புளொட் ஆகியன ஏற்றுக்கொள்ளும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, சாதகமான முடிவொன்றை எடுக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் இது தொடர்பான தங்களது கருத்துக்களை ஏனைய கட்சியினரும் வெளிப்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இந்த தேர்தல் ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கி நடைபெறுவதால் வேட்பாளர்கள் தெரிவு அந்தந்த மாவட்ட காரியாலயங்கள் ஊடாக நடைபெறவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts