மாவையுடன் முரண்பாடா?, கூட்டமைப்புக்குள் குழப்பமா? – முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதில்

கூட்டமைப்புக்குள் எந்தப் பிரச்சினைகளும் கிடையாது. சில கருத்து முரண்பாடுகள் அவ்வப்போது ஏற்படலாம். அதைப் பெரிதுபடுத்துவதில் ஒரு சில ஆங்கில, சிங்கள ஊடகங்கள் முனைப்பாக உள்ளன எனத் தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் அதிகரித்து வருவதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்-

wigneswaran__vick

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஓர் ஜனநாயகக் கட்சி என்ற வகையில் கருத்து மோதல்கள் இடம்பெறுவது சர்வசாதாரண விடயம். அதனை ஏன் பெரிதுபடுத்த வேண்டும்? இவை அனைத்தையும் நாம் பெரிதுபடுத்துவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. எமது நோக்கம் நன்றாக அமைய வேண்டும். அது மாத்திரமன்றி எவரும் தனது கருத்தைக் கூற பரிபூரணமான உரிமையுடையவர்களாவார். அந்தவகையில் நாம் வெறுமனே உணர்ச்சி வசப்பட வேண்டிய அவசியமில்லை. என்னைப் பொறுத்தமட்டில் தமிழ் மக்களுக்கு நான் மிகவும் விசுவாசமாகவும் இதயசுத்தியுடனும் தொடர்ந்து செயற்படுவோம்.

நாம் அனைவரும் தமிழ் மக்களின் துயர்துடைக்கும் பணிக்கானப் புறப்பட்டவர்கள். அந்த வகையில் அனைவருமே எமது பணிகளை மிகவும் நேர்தியாக மேற்கொண்டு வருகின்றோம். பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவும் காசி ஆனந்தனும் நான் மட்டக்களப்பு நீதிபதியாக இருந்தபோது 1979ல் என்னால் விடுவிக்கப்பட்டார்கள். நீதியின் பால் சார்ந்தே அவர்களை பலகால சிறைவாசத்தின் பின்னர் விடுவித்தேன். அதனால் என்னை உடனேயே மட்டக்களப்பிலிருந்து தண்டனை தரும் விதத்தில் மாற்றிவிட்டார்கள்.

அன்று தொடக்கம் எனக்கு மாவையைத் தெரியும். தமிழ் மக்களின் ஈடேற்றத்துக்காக சளைக்காது குரல் கொடுத்து வரும் ஒருவர் அவர். அவர் மீது நான் மிகுந்த அன்பு கொண்டவர். எமக்கிடையே எந்தப் பிரச்சினைகளும் கிடையாது. சிலவேளைகளில் சில வார்ததைகள் சொற்கள் தவறான கருத்தைக் கொடுக்கலாம். சற்று நிதானமாகச் சிந்தித்துப் பார்த்ததால் அதில் தவறில்லை என்பது புலனாகும். அதுபோன்று தான இதுவும். எமக்கிடையே எந்தப் பிரச்சினையும் இல்லை.

எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன்.ஆளுமை மிக்க தலைவர் அவர். அந்தவகையில் அவர் தனது பொறுப்பை உணர்ந்து செயற்படுவார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் எனக்கு இல்லை. காலத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். விரைவில் நாம் ஒன்றுகூடி பேசி தமிழ் மக்களின் நெருக்கடிகளைப் போக்க அடுத்த கட்ட நகர்வுகள் என்ன என்பது தொடர்பில் தீர்மானிப்போம்.

மக்கள் எம்மீது மிகுந்த நம்பிக்கையை வைத்துள்ளார்கள். அந்த நம்பிக்கை வீண்போகாத வகையில் செயற்பட வேண்டியது எமது தலையாய கடமை. எமது மக்கள் யுத்தவடுக்களைத் தாங்கியவர்களாகவும், அதிலிருந்தும் மீட்சி பெற இயலாதவர்களாகவும் காணப்படுகின்றனர். இன்று இளைஞர்களின் பிரச்சினை, கணவன்மாரை இழந்த பெண்களின் பிரச்சினை, வயோதிபர்களின் பிரச்சினை, முன்னாள் போராளிகளின் பிரச்சினை எனப் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. அவற்றுக்கு நாம் தீர்வு காண வேண்டும்.

தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை நாம் சாதகமாக கையாள்வது அவசியம். யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணை விவகாரம் முனைப்புப் பெற்றுள்ளது. அது தொடர்பில் நாம் துரிதமாகவும் வினைத்திறனுடனும் செயற்பட வேண்டும். இவ்வாறான பல்வேறு கடமைகள் எம்முன்னே விரிந்து கிடக்கும் நிலையில் நாம் சிறுசிறு விடயங்களில் முரண்படுவது வேண்டாத காரியம். இதனை ஒருசில ஊடகங்கள் பெரிதுபடுத்தி அதில் குளிர்காய முனைகின்றன. எனவே மக்கள் அது தொடர்பில் குழப்பமடைய வேண்டாம்.

நாம் மக்களால் மக்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டவர்கள். எமக்கடையே எந்தவிதமான போட்டியும், பொறாமையும் இருக்கக்கூடாது. அவ்வாறு தான் நாம் இன்றுவரை அனைவரும் செயற்பட்டு வருகிறோம். அதை எதிர்காலத்திலும் கடைப்பிடிப்போம். மக்கள் எம்மீது கொண்ட அதீத நம்பிக்கையே பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் எம்மை ஆதரித்து முன்னிலைப்படுத்தி வந்துள்ளது. எனவே தமிழர் பிரச்சினை சாண் ஏற முழம் சறுக்கும் நிலைக்கு செல்லாதிருப்பதை உறுதி செய்வது எமது தார்மீக கடமை. அதனை நாம் செவ்வனே செய்வோம். தமிழர்களுக்கு விடிவு பிறக்கும் வகையில் நாம் செயற்படுவோம்.

தமிழ் மக்கள் மனம் தளரக்கூடாது. சிறு விடயங்களை எண்ணிக் கவலைகொள்ளத் தேவையில்லை. நாம் அனைவரும் மிகுந்த விட்டுக்கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் தொடர்ந்து செயற்படுவோம். வெற்றி கிடைக்கும் என்பதில் எவரும் கிஞசித்தும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. அதேபோன்று ஊடகங்களும் தங்கள தார்மிகப் பொறுப்பை உணர்ந்து செயற்படுவது அவசியமாகும். இன்று கிட்டியுள்ள சந்தர்ப்பத்தை நாம் சரியாகப் பயன்படுத்தி வெற்றி கொள்ளச் சாத்தியமான அனைத்தையும் மேற்கொள்வோம். அதேவேளை அனைவரது ஒத்துழைப்பும் எமக்கு இன்றியமையாததாகும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts