கடந்த காலங்களை போலல்லாது இம்முறை மாவீரர் வாரத்தை எவ்வித இடையூறும் இன்றி அனுஷ்டிக்கலாம் என பலத்த எதிர்பார்ப்புகள் காணப்பட்ட நிலையில், அதற்கு இடமளிக்கப்பட மாட்டாதென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
உரிமைகளுக்காய் ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை நினைவுகூருவதற்காக அனுஷ்டிக்கப்படும் மாவீரர் வாரம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது.
இதற்கென வட மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், து.ரவிகரன் மற்றும் ஜனாநாயக போராளிகள் கட்சிகள் சார்பில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், விடுதலைப் புலி உறுப்பினர்களை நினைவுகூரும் வகையில் ஒன்றுகூடுவார்களாயின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உரிமைகளுக்காய் போராடி உயிர்நீத்தவர்களை பயங்கரவாதிகள் என நோக்காமல் அவர்களை நினைவுகூர அரசாங்கம் அனுமதி அளிப்பதானது நல்லிணக்கத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமையுமென அண்மையில் நாடாளுமன்றில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.