‘மாவீரர் வாரத்தில் குடிப்பாயா?’ எனக்கேட்டு முதியவர் மீது தாக்குதல்!!

மாவீரர் வாரத்தில் குடிப்பாயா?’ எனக்கேட்டு இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் முதியவர் ஒருவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (25) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டுவில் தெற்கு பகுதியைச் சேர்ந்த சிவலை பரமசாமி (வயது 65) என்ற முதியவர் படுகாயமடைந்தார்.

இது தொடர்பில் பொலிஸார் மேலும் கூறுகையில்,

மேற்படி முதியவர் தனது வீட்டிலிருந்து கள்ளு தவறணை ஒன்றுக்கு கள்ளு குடிப்பதற்காக செவ்வாய்க்கிழமை (25) இரவு சென்றுள்ளார்.

வீதியில் முதியவரை மறித்த சிலர் எங்கே செல்கின்றாய்? எனக்கேட்டுள்ளனர். இதன்போது முதியவர் தான் கள்ளு தவறணைக்கு செல்வதாக கூறியுள்ளார்.

‘மாவீரர் வாரத்தில் குடிப்பாயா?, குடித்து மாவீரர்களை அவமானப்படுத்துவாயா?’ எனக்கேட்டு அந்த கும்பல் முதியவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இதில் படுகாயமடைந்த முதியவர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

முறைப்பாட்டை பதிவு செய்துக்கொண்டு, முதியவரை வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தான் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts