மாவீரர் நினைவாகவும் மரம் நடுவோம்! ‘தேசத்தின் நிழல்’ மரநடுகை நிகழ்ச்சியில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்.

தமிழ்ச்சமூகம் மரங்களை வழிபட்ட ஒரு இனம். அதன் தொடர்ச்சியாகவே இன்று எமது ஆலயங்கள் தல விருட்சங்களைக் கொண்டிருக்கின்றன. பிறந்தநாள் நினைவாக மரங்களை நடுகின்ற நாம் அதேசமயம் மறைந்த உறவுகளின் நினைவாகவும் மரங்களை நடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில்; தேசிய மரநடுகைத் திட்டத்தில் இணைந்துகொண்டிருக்கும் நாம் மாவீரர் தினத்தன்றும் மரங்களை நடுவோம். அரசாங்கத்திற்கு பயங்கரவாதிகள் எனத்தெரிபவர்கள் எமக்கு மாவீரர்கள். அவர்கள் எங்களுடைய இரத்த உறவுகள். இதனைப் படையினர் புரிந்துகொள்ளவேண்டும் என்று வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

IMG_0210 copy

கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் இரணைமடுக்குள இடதுகரை வாய்க்காலின் இரு மருங்கிலும் ‘தேசத்தின் நிழல்’ என்னும் தேசிய மரநடுகைத் திட்டம் வியாழன் (15.11.2013) அன்று நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நான் பங்கேற்றுக்கொண்டிருக்கின்ற ‘தேசத்தின் நிழல்’ என்னும் மரநடுகை நிகழ்ச்சி இன்று நாடு முழுவதும் அரச திணைக்களங்களினால் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு தேசிய மரநடுகைத் திட்டம் ஆகும். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் பிறந்தநாள் நினைவாகவும், அவரது பதவியேற்பு நினைவாகவும் கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து இம் மரநடுகைத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

IMG_0242 copy

தமிழ்த் தேசிய விடுதலையை முழுமூச்சாக நிராகரிக்கின்ற ஒரு ஜனாதிபதியின் நினைவாக நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில், தமிழ்த்தேசியத்தில் தீவிரபற்றுறுதி கொண்ட நான் கலந்துகொண்டிருக்கிறேன். அதுவும், யாழ்ப்பாணத்தில் வலி வடக்கு மக்கள் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டிருக்கும் தங்கள் நிலங்களில் மீளக்குடியேற அனுமதிகோரியும், காணாமற்போனவர்களைக் கண்டுபிடித்துத் தரக்கோரி அவர்களது உறவுகளும் மிகவும் உணர்ச்சி பூர்வமான போராட்டங்களை நடாத்திக்கொண்டிருக்கும்போது நான் இம் மரநடுகை நிகழ்ச்சியில் இராணுவத்தினரோடு சேர்ந்து கலந்துகொண்டிருக்கிறேனெனில் அதற்குக்காரணம் சுற்றுச்சூழலியலாளர்களுக்கு இனம், மதம், மொழி போன்ற பேதங்கள் இல்லை என்பதும் சூழலியல் நடவடிக்கைகளுக்குத் தேசிய எல்லைகள் கிடையாது என்பதும்தான்.

எமது வடக்கு-கிழக்கின் சூழற்பிரச்சினைகள் தென்னிலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். தென்னிலங்கையில் ஏற்படும் சூழல் பாதிப்புகள் எமது பிரதேசங்களைப் பாதிக்கும். முழு இலங்கையில் ஏற்படும் பாதிப்புகள் எமது இயற்கை அன்னையாகிய முழுப்பூமியையும் பாதிக்கும். இதனால்தான் சூழல்சார் நடவடிக்கைகளை உலகளாவச் சிந்தித்து உள்ளூர மேற்கொள்ளவேண்டும் (Think globally Act locally) என்கிறார்கள். இதன்படி, இன்று கிளிநொச்சியில் நாட்டப்படும் இந்த மரங்கள் எமது தாயகத்தையும் தாண்டி, இலங்கையையும் தாண்டி ஒட்டுமொத்த பூமியையும் குளிர்விக்கும் நற்செயலாக அமையும்.

IMG_0264 copy

மரங்களின் பயன்களை நாங்கள் குறைவாகவே மதிப்பிட்டுவைத்திருக்கிறோம். மரம் நிழல் தரும், மழை தரும், உணவு தரும், விறகு தரும், சுவாசிக்கக் காற்றுத்தரும் என்று சிலவற்றை மாத்திரமே தெரிந்துவைத்திருக்கிறோம். நாங்கள் பரிணாமிப்பதற்கு முன்னால் இந்தப் பூமியில் தோன்றிய மரங்கள் எங்களுக்குத் தெரியாத எண்ணிலடங்கா இரகசியங்களைத் தம்முள் கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற ஒரு ஆய்வில் காடுகளில் மரங்களின் ஊடாக நாம் நடந்துசெல்லும்போது நமது உடலில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் இரசாயனங்களின் அளவு குறைவதும், நோய்க் கிருமிகளை அழிக்கின்ற கலங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் கண்டறியப்பட்டது. மரங்கள் மிகச் சிறந்த மாசு வடிகட்டிகளாகும். கட்டிடக் காடுகளாக மாறிவிட்டிருக்கும் நகரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று ஏராளமான மாசுகளால் நிறைந்திருக்கின்றது. இந் நகரங்களில் எங்கு மரங்கள் அதிகமாக வளர்க்கப்பட்டிருக்கின்றதோ அங்கு அஸ்மா நோய்க்கு ஆளாகுபவர்களின் விழுக்காடு மிகக் குறைவாக இருப்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இவை மாத்திரம் அல்ல் மரங்கள் நிலத்தின் நஞ்சையும் சுத்திகரிக்கின்றன. வேர்களுக்கு அருகாமையில் உள்ள நுண்ணங்கிகள் நிலத்தில் சேர்ந்திருக்கக்கூடிய கழிவுகளிலிருந்தும் வெடிமருந்து இரசாயனங்களிலிருந்தும் நஞ்சைப் பிரித்தெடுத்துத் தூய்மைப்படுத்துகின்றன. அந்த வகையில் வெடிகுண்டு மழைபொழிந்த இந்தக் கிளிநொச்சி மண்ணில் மரங்களின் நடுகை மேன்மேலும் ஊக்குவிக்கப்படவேண்டும்.
ஆனால், நாம் இந்த மரங்களை நட்டுக்கொண்டிருக்கும் இதே சமயம் இந்த வன்னிப்பெரு நிலப்பரப்பில் காடுகள் கண்மூடித்தனமாக அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. விடுதலைப்புலிகள் இந்த மண்ணில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் புதிய காடுகள் வளர்த்தெடுக்கப்பட்டன.

IMG_0282 copy

பழைய காடுகள் அழியாது காப்பாற்றப்பட்டன. மரங்களை வெட்டியமைக்காகப் போராளிகள்கூட தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். தண்டனையாக மரங்களை நட்டு வளர்க்கும் பணி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இன்று அரசியற் பலத்தோடு குடியேற்றத்தின் பெயரால் எமது காட்டுவளம் பெருமளவுக்கு அழிக்கப்படுகிறது.

காட்டு வளம் மட்டுமல்ல் எங்களின் இயற்கைவளங்கள் அத்தனையுமே இவ்வாறுதான் சூறையாடப்படுகின்றது. அண்மையில் நான் நெடுந்தீவு சென்றபோது கடற்கரையில் சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெறுவதாக அங்குள்ள மக்கள் சுட்டிக்காட்டினார்கள். அப்பகுதிக்கு நான் சென்று பார்த்தபோது காலாவதியான அனுமதிப் பத்திரத்தை வைத்துக்கொண்டு அரசியல் கட்சியொன்றின் செல்வாக்குப் பெற்ற ஒருநபர் உழவூர்தியில் மணல் ஏற்றி வந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. இதனைத் தடுத்து நிறுத்தவேண்டியவர்கள் இங்கு நிலைகொண்டிருக்கின்ற இராணுவத்தினரும் காவல்துறையினரும்தான். அவர்கள் பார்த்திருக்க எமது வளம் கொள்ளை போகின்றதெனில் அதில் அவர்களுக்கும் பங்கு உண்டு என்றுதான் அர்த்தப்படும்.

இவைபோன்றவற்றை கட்டுப்படுத்தும் அடிப்படையிலேயே வடக்கு மாகாணசபையினராகிய நாம் காவல்துறை அதிகாரத்தை கோரி நிற்கின்றோம். நமது முதலமைச்சரின் இந்தக்கோரிக்கைக்குப் பதிலாக காவல்துறை அதிகாரி ஒருவர், சிங்கள மக்களும் தமிழ் மக்களும் வெற்றிலை சாப்பிடுவதால் இரண்டுபேரும் ஒரே பண்பாட்டைக்கொண்டவர்கள் என்ற பொருத்தமற்ற பதிலைக் கூறியிருந்தார். இங்கு எவருடைய பண்பாடும் உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல. ஆனால், நாம் வேறுபட்ட பண்பாட்டைக்கொண்டவர்கள். நமது தொப்புள்கொடி உறவுகளான தமிழகத்துத் தமிழர்களிடையே ஒரு தாய் தனது மகளுக்குத் தனது சகோதரரைத் திருமணம் முடித்துக்கொடுக்கும் பண்பாடு நிலவுகிறது. ஆனால், ஈழத் தமிழர்களிடையே மாமன் -மருமகள் திருமண உறவுமுறை இல்லை. வடக்கு மாகாணத்தில்கூட மாவட்டத்துக்கு மாவட்டம் உணவுப்பண்பாடு வேறுபடுகிறது. முல்லைத் தமிழர்கள் சிவப்பரிசிச் சோற்றை அதிகம் உண்ண யாழ்ப்பாண மக்களோ குத்தரிசிச் சோற்றையே அதிகம் விரும்புகிறார்கள். இந்நிலையில் தமிழ், சிங்கள மக்களை ஒத்த பண்பாடு உடையவர்கள் என சமப்படுத்துவது அறிவிலித்தனமானது. இலங்கைத் தீவின் பண்பாட்டின் பன்மயத்தன்மையை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

IMG_0323 copy

பண்பாட்டில் மாத்திரமல்ல் நாம் வாழுகின்ற எமது வடக்கு-கிழக்கும், சிங்களச் சகோதரர்கள் வாழுகின்ற தெற்கும் வேறுபட்ட சூழமைப்பைக்கொண்டது. புதிய சூழலியற் சிந்தனைகளின்படி ஒரு தேசிய இனம் வாழுகின்ற சூழல் அதன் தேசியச்சூழலாக (National environment) வரையறுக்கப்படுகிறது. எமது தேசியச் சூழலும் சிங்களச் சகோதரர்களின் தேசியச் சூழலும் வெவ்வேறானவை. வேறுபட்ட இயற்கைத் தாவரங்களையும் விலங்குகளையும் கனிய வளங்களையும் கொண்டவை. அந்த வகையில் ஒரு தேசியச் சூழலை அங்கு காலங்காலமாக வாழ்ந்துவரும், அந்தச் சூழலுக்குரித்தான தேசிய இனத்தால் மாத்திரமே மற்றையவர்களைவிட அதிகம் அறிந்துகொள்ள முடியும். இதனால்தான் எமது தேசியச் சூழலை நல்லாட்சிசெய்யும் அரசியல் அதிகாரம் எம்மிடமே இருக்கவேண்டும் என்கிறோம். இதன் பொருள் பிரிவினைவாதமல்ல என்றும் தெரிவித்தார்.

Related Posts