கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்ளைச் சிரமதானம் செய்யும் பணிகள் அப்பகுதி மக்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சிரமதான பணிகள் இன்று காலை வட மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிரமதானப் பணிகளில் அப்பகுதி மக்கள் மற்றும் வடமாகாண கல்வியமைச்ச குருகுலராசா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், முழங்காவில், தேராவில் ஆகிய பகுதிகளில் மொத்தமாக மூன்று மாவீரர் துயிலும் இல்லங்கள் காணப்படுகின்ற போதிலும், யுத்தத்தின் பின்னர் தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் ஸ்ரீலங்கா இராணுவத்தின் வசம் காணப்படுகின்றது.
இந்நிலையிலேயே, கனகபுரம், முழங்காவில் பகுதிகளிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் மக்களினால் சிரமதானம் செய்யப்பட்டுவருகின்றது.
தமிழ் இனத்தின் விடுதலைக்காகப் போராடி தமது உயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தமிழ் மக்களினால் அஞ்சலி செலுத்தப்படுகின்றது.
இந்த நிலையில், போரின்போது கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூறுவதற்கு எவராவது முற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், யுத்ததின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளதாகத் தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், எதிர்வரும் 27 ஆம் திகதி நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறும் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.