மாவீரர் தினமாக இன்று வியாழக்கிழமை வடக்குமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் மரநடுகை நிகழ்வு வரணிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்னற உறுப்பினர்கள், வடக்குமாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு மரங்களை நட்டுவைத்தனர்.
இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த விவசாய அமைச்சர், எமக்காகப் போராடியவர்களின் நினைவு இடங்கள் நிர்மூலமாக்கப்பட்டு அந்த இடங்களில் இன்று படையினர் நிலைகொண்டிருக்கின்றனர். அங்கு சென்று அஞ்சலி செலுத்தமுடியாத நிலையில் அவர்களின் நினைவாக இன்று மரங்களை நாட்டுகின்றோம்.
மரணித்தவர்களின் நினைவாக நடப்படும் மரங்கள் ஒவ்வொன்றும் ஓர் உயிருள்ள நினைவாலயங்ளளே. விடுதலைப்புலிகளோ அல்லது வேறு போராளிகளோ இலங்கை அரசாங்கத்தின் பார்வையில் பயங்கரவாதிகளாகத் தெரியலாம். ஆனால், அவர்கள் எங்களின் இரத்த உறவுகள். எங்களுக்காகத் தங்கள் உயிர்களைக் கொடுத்த தியாக சீலர்களுக்கு யாரும் அஞ்சலி செலுத்தக்கூடாது என்பதில் இராணுவம் மிகக்கவனமாக இருக்கிறது. நினைவு நடுகற்களை அழிப்பதன் மூலமோ, நினைவுதின நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிப்பதன் மூலமோ மக்கள் மனங்களில் இருக்கும் நினைவுகளை ஒருபோதும் அழித்துவிடமுடியாது என்பதை அரசாங்கமோ, இராணுவமோ புரிந்துகொள்வதாகத் தெரியவில்லை. – என்றார்.
இந்த நிகழ்ச்சியில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனோடு, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா வடமாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், வே.சிவயோகன், ச.சுகிர்தன், சாவகச்சேரி பிரதேசசபைத் தலைவர் சி.துரைராசா, வலிவடக்கு பிரதேசசபைத் தலைவர் ச.சஜீவன் ஆகியோருடன் பொதுமக்களும் கலந்துகொண்டு மரங்களை நாட்டி வைத்தனர்.