எமது தேச விடுதலைக்காக போராடிய மாவீரர்களை எம்மிடமிருந்து எந்த சக்தியாலும் பிரித்து விட முடியாது என வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
நேற்று வடமாகாண சபையின் கன்னியமர்வின் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மிக நெடிய வரலாறு கொண்டு மொழி வளம் மற்றும் கலாசாரக் கட்டமைப்புடனும் வாழுகின்ற தமிழ்த்தேசிய இனத்தின் ஆட்சி அரங்கேறுகின்ற இந்த மாகாணசபையில் உயிர்த்தியாகம் செய்த உறவுகளை வணங்குகின்றேன்.
தமிழினத்தின் வரலாற்றில் இன்று மிகவும் முக்கிய நாளென்பதுடன் இவ்வுலகு எக்காலத்திலும் கண்டிராத மாபெரும் அழிவுகளைச் சந்தித்த தமிழினம் தமது கண்ணீர்த்துளிகளை வாக்குகளாக மாற்றிப் பெற்றுக் கொடுத்த வெற்றியினை பறைசாற்றுகின்ற நாளும் ஆகும்.
எமது தாயகம் முழுமையான சுதந்திரத்துடன் வாழ வேண்டுமென்கின்ற தமது ஆழமான அபிலாசையையே மக்கள் தமது வாக்குகள் மூலம் மீண்டுமொரு முறை உணர்த்தியிருக்கின்றனர்.
வடக்கு, கிழக்கு இரு வேறாகப் பிரிக்கப்பட்டு தனித்தனித் தேர்தல்கள் நடைபெறுகின்றன. அது மட்டுமின்றி எமது தாயக பிரதேசத்தில் காலத்திற்கு காலம் திட்டமிட்ட வகையில் வேறு இனங்களின் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
எமது மாகாணத்தில் நில அபகரிப்பும், வள அபகரிப்பும் என்றுமில்லாத வகையில் மிகவும் துரிதகதியில் மேற்கொள்ளப்படுகின்றதுடன், இவை அதிகமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்றன.
சுனாமியாலும், யுத்தத்தாலும் பேரழிவைச் சந்தித்த நாம் இப்போது நில ஆக்கிரமிப்பாலும், வளங்கள் பறிப்பாலும் கடும் சவாலை எதிர்கொண்டுள்ளோம்.
மீளக்குடியேறச் சென்ற கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி மக்கள் தமது 2568 ஏக்கர் இற்கும் மேற்பட்ட விளைநிலங்கள் அபகரிக்கப்பட்டிருப்பதால், தமது வாழ்வாதாரம் இழந்ததை அழுகுரலோடு என்னிடம் கூறுகின்றனர்.
இந்நிலங்களையும் வவுனியாவில் அபகரிக்கப்பட்ட நிலங்களையும் இணைத்து வெலிஓயா என்று புதிய உத்தியோகபூர்வமற்ற பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட்டு சகல வசதிகளுடன் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
நாயாறு மற்றும் கொக்கிளாய் ஆறுகளில் தென்னிலங்கை மீனவர்களின் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால் அவற்றில் கடல் வளம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (18) கொக்கிளாய் கடனீரேரியில் தடை செய்யப்பட்ட தொழில்களைச் செய்த தென்னிலங்கை மீனவர்களை நடுக்கடலில் வைத்து எச்சரித்திருந்தேன்.
ஒரு காலத்தில் மிகப்பெரும் கடல் வளங்களைத் தரும் வங்கியாகத் திகழ்ந்த முல்லைத்தீவுக் கடலும் அதனோடு அண்டிய சிறு கடல்களும் இன்று தமிழ் மீனவர்களின் சோகமாக மாறி வருவதன் ரகசியமும் இதுவே.
எங்கள் மண்ணிலே போரின் காயங்களும் சுனாமியின் ஈரமும் இன்னமும் காயவில்லை. அடங்காமையின் குறியீடாக 71 சதவீத வாக்குப்பதிவை தந்த முல்லை மக்கள், இன்னும் ஆற்றாமையில் அழுது கொண்டே இருக்கிறார்கள்.
முன்னாள் போராளிகள், விதவைப்பெண்கள், ஊனமுற்றோர், தாய் – தந்தை இழந்தோர், ஆதரவற்றோர் என்று எம்மக்களின் சோகங்களின் அடையாளங்கள் ஏராளம்.
எம் மக்களில் பலர் இன்னமும் உடலினுள் குண்டுகளின் சிதறல்களுடன் தான் நடமாடுகின்றனர்.
எங்கள் பெண்கள் படும் துன்பங்கள் ஏராளம். கணவனை இழந்த பெண்களின் குடும்ப நிலையோ மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அடுத்தவேளை உணவிற்காக அழுகின்ற குடும்பங்கள் எண்ணிலடங்காதவை. இனத்தின் எதிர்கால இருப்பிற்காக தேசியத்தைப் பலப்படுத்த முன்வந்தவர்களே இப்படி அடிபட்ட இருக்கின்றார்கள்.
எங்கள் இளைஞர்கள், யுவதிகளின் விளையாட்டுத்திறமைகள் வெளியே தெரியாமல் போகின்றதுடன், எங்கள் மாணவர்களின் கல்வி நிலை மிக மோசமாகவுள்ளது. இவ்வாறான நிலையில் முல்லைத்தீவு கல்விவலயத்துடன் இரு சிங்களப்படசாலைகள் இணைக்கப்பட்டு தொழில்நுட்பப்பிரிவு ஆரம்பிப்பதற்கான அனுமதியும் வலயக்கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்டிருக்கின்றது.
குடியேற்றப்பட்ட 460 சம்பத்நுவர மாணவர்களுக்கு கொடுத்த முக்கியத்துவம் எம் மண்ணின் மைந்தர்களான தமிழ் மாணவர்கள் 17739 பேருக்கு வழங்கப்படவில்லை.
காணாமற் போனோர் பற்றிய பிரச்சினை எமது மண்ணின் இன்னோர் சோகமாகும். ஏராளமான மக்கள் இன்னும் தம் சொந்த நிலங்களுக்கு மீளத் திரும்ப இயலாத நிலை அங்கே நிலவுகின்றது. கேப்பிலாப்பிலவு உள்ளிட்ட பல பிரதேச மக்கள் இன்னும் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை.
இம்மண்ணில் பிறந்த பிள்ளைகள், இம்மண்ணிற்காக உயர்நீத்த பிள்ளைகள், எம் தேசிய இனத்தின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த எங்கள் பிள்ளைகளான மாவீரர்களின் நினைவிடங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன.
மறவர்கள் சிந்திய இரத்தம் எங்கள் கடல் நீரிலே கலந்தே இருக்கின்றது. அந்த நீரைப்பருகுகிற மீன்களைத் தான் எம் மக்கள் உண்கிறார்கள். அவர்களின் உடல்கள் எம் மண்ணுடன் கலந்து விதையாயிருக்கின்றன. அங்கே முழைக்கும் தாவரங்களைத்தான் நாம் உட்கொள்கிறோம்.
எம் மக்களின் விடிவிற்காக குரல் கொடுத்த, போராடச் சென்ற அனைவரும் எமக்குள் இருந்த வேறுபாடுகளைக் களைந்து இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஓரணியில் நின்று குரல் கொடுக்கிறோம். ஆனால் இன்றைய நாளில் எமது இனப்பிரச்சினையானது என்றுமில்லாத வகையில் சர்வதேசமயப்பட்டிருக்கின்றது.
எமக்காக புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழக மக்கள் கொடுக்கிற குரல் மிகவும் வலுவாக ஒலிப்பது பெரும் ஆறுதலாக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.