மாவீரர்களின் தியாகங்களை தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தாதீர்கள்!

நாட்டின் தேசிய இனமான தமிழ் மக்களுக்காக உண்மையான உணர்வுகளோடு போராடி மரணித்த மாவீரர்களையோ, தியாகத்திற்கு உரித்தான போராளிகளையோ தேர்தல் பிரசாரங்களின்போது கொச்சைப்படுத்தவோ, அதை ஒரு கருப்பொருளாகக் கொள்ளவோ வேண்டாம் என மேல் மாகாண சபையின் ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர் சண்.குகவரதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

sun kugvarthan

மொறட்டுவ பல்கலைக்கழக பழைய மாணவர்களுடனான சந்திப்பில் ‘இன்றைய சூழலில் ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களின் அபிலாஷைகளும்’ என்றதொனிப்பொருளில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த 30 வருடகால யுத்தம் முடிவுக்கு வந்தது என்று மட்டும்தான் அரசு கூறுகிறதே தவிர அதில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கோ இன்றும் அகதிகளாக வாழுகின்ற எமது உடன்பிறப்புகளுக்கோ எந்தவொரு தீர்வையும் முன்வைக்கவில்லை.

தொடர்ச்சியான சர்வதேச அழுத்தங்களினால் வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால், வெற்றிபெற்று ஆட்சியை அமைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை நடவடிக்கைகளை செயற்படுத்த முடியாமல் உள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி ஜனாதிபதி மஹிந்தாஹ் ராஜபக்‌ஷவின் உத்தரவுகளை நேரடியாக அமுல்படுத்துவதனால் வடக்கு மாகாண சபை நிர்வாகத்தில் இடையூறுகள் ஏற்படுகின்றன. நிதி ஒதுக்கீடுகள் கூட ஆளுநர் மூலமாக செய்யப்படுகின்றன. இந்தநிலையில் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்துக்காக மாவீரர்களின் தியாகங்களை சிங்கள இனவாத அரசியல் கட்சிகள் பயன்படுத்த முற்படுகின்றன.

பௌத்த சிங்கள வாக்குகளைத் திரட்டுவதற்காக தேர்தலுக்கான பிரசாரமாக மாவீரர்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவேண்டும். அன்று இலங்கை வரலாற்றில் எல்லாள மன்னனை துட்டகைமுனு போரில் சூழ்ச்சியால் வெற்றிபெற்றபோதும் அவனது போர்த் திறமையையும் துணிச்சலையும் கண்டு எல்லாள மன்னனுக்கு சிலைவைத்து தான் அப்பாதையால் செல்லும்போதும் வரும்போதும் சிலைக்கு முன்னால் இறங்கி வழிபட்டு செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தான்.

ஆனால், இன்று துட்டகைமுனு என்று தம்மைக் கூறிக்கொள்பவர்களுக்கு அன்றைய துட்டகைமுனு யார் என்று இன்னும் தெரியாமலிருக்கின்றது. துட்டகைமுனு மன்னன் ஒரு தமிழ் பரம்பரையில் வந்த மன்னன் என்பதும் அவனது பாட்டனார் முத்துசிவன் தமிழன் என்பதும் அதைத் தொடர்ந்து அன்றைய காலகட்டங்களில் சிங்கள பௌத்தர்கள் வருவதற்கு முன்னர் ஏராளமான தமிழ் மக்கள் பௌத்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள் என்பதும் துட்டகைமுனு அந்தப் பாரம்பரியத்தில் வந்தபடியால் அவனுக்கு மற்றவர்களை மதிக்கும் குணமும் பேராண்மையை தீர்மானிக்கும் சக்தியும் இருந்தது என்பதனையும் யாராலும் மறுக்கமுடியாது.

துட்டகைமுனு எல்லாளனை எதிர்த்துப் போரிடச் சென்றது ஒரு சிங்கள மன்னனாக அல்ல, தனது இரத்தத்தில் தமிழ் இரத்தம் இருக்கின்றது என்பதை போரிட்டு பலப்பரீட்சை பார்க்கவே எல்லாள மன்னனுடன் சென்றான். ஆனால், இன்று அதை பௌத்த இதிகாசங்களும் வரலாறுகளும் தமக்கு ஏற்றால் போல் சோடித்துவிட்டு முள்ளிவாய்க்காலில் பாரிய படுகொலையொன்றை செய்துவிட்டு தமிழினத்தின் மானத்திற்காகப் போராடிய மாவீரர்களின் உணர்ச்சிகளை துச்சமாக மதித்து மாவீரர் மயானங்களை இடித்து அவர்களின் நம்பகத்தன்மையை இல்லாதொழித்துக் கொண்டிருக்கின்றன.

எனவே, வருகின்ற தேர்தல் பிரசாரங்களில் மாவீரர்களின்உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதையொரு காரணியாகப் பயன்படுத்தவேண்டாம்” – என்றார்.

Related Posts