மாற்றுத் திறனாளியை யாழ் பஸ்நிலையம் சென்று பிச்சை எடுக்குமாறு கூறிய வட்டுக்கோட்டை பெண் கிராமசேவகர்!!

வழங்கப்பட்ட உறுதி மொழிக்கேற்ப அகற்றப்பட்ட தனது தொழிலிடத்தை மீண்டும் அமைத்து தாருங்கள் என கேட்ட மாற்றுத் திறனாளியை யாழ் பஸ்நிலையம் சென்று பிச்சை எடு என்று வட்டுக்கோட்டையின் வடக்கு அராலி பகுதி ஜே/164 பெண் கிராமசேவகர் ஒருவர் அடாவடித்தனமாக நடத்திய சம்பவம் ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.

யாழ் மாவட்டத்தின் அநேக பகுதிகளில் நீர் வழங்கலை மேற்கொள்வதற்காக பாரிய குழாய்களை நிலத்தடியில் புதைத்து நீர் வழங்கலுக்கான முன்னேற்பாடுகளை துறைசார் தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் வீதியின் ஓரப்பகுதிகளில் நிலத்தை கிளறுவதால் பல அசௌகரியங்களை பொதுமக்கள் எதிர்கொள்ள நேரிடுகின்றது.

இந்நிலையில் வட்டுக்கோட்டை அராலி பகுதியில் குறித்த நீர் வழங்கல் நடவடிக்கைக்காக நிலத்தடியில் குழாய்கள் பொருத்தும் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் யாழ்ப்பாணத்திலிருந்து வட்டுக்கோட்டை செல்லும் கல்லுண்டாய் வீதியூடாக வட்டுக்கோட்டை சந்தி செல்லும் பகுதியில் ஒடுங்கிய வீதி காணப்படுவதால் சில இடங்களில் மக்களின் குடியிருப்பு காணிகளூடாக குறித்த குழாய்கள் நிலத்தடியில் புதைக்கப்பட்டு வருகின்றன. இதனால் பலரது வேலிகள், மதில்கள் மற்றும் வியாபார நிலையங்கள் கூட அகற்றப்பட்டும் உள்ளன.

இவ்வாறான ஒரு சம்பவத்தில் வட்டுக்கோட்டை பிரதேசத்தின் வடக்கு அராலி பகுதியில் ஊனமுற்ற ஒருவர் துவிச்சக்கர வண்டி திருத்தும் ஒரு சிறு கடையை தனியார் ஒருவரது காணியின் முற்பகுதியில் அமைத்து குறித்த தொழிலை தமது குடும்ப பொருளாதாரத்திற்கான தொழிலாக மேற்கொண்டு வந்துள்ளார்.

குறித்த பகுதியால் குழாய் பொருத்தப்பட வேண்டி ஏற்பட்டதால் அந்த மாற்றுத் திறனாளியிடம் அவரது வாழ்வாதாரத்தின் முதலீடாக இருந்த துவிச்சக்கர வண்டி திருத்தும் கடையை அகற்றுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ஆனால் குறித்த மாற்றுத்திறனாளி தனது வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரம் கிடைப்பது இக்கடைமூலமே என்றும் இதனை அகற்றினால் தனது வருமானம் இழக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டிய நிலையில் குறித்த பகுதி பெண் கிராம சேவகர் மற்றும் பொருளாதார உத்தியோகத்தர் ஆகியோர் தலையிட்டு மாற்று நடவடிக்கை எடுத்து தருவதாகவும் அதற்கு தாம் பொறுப்பு என்றும் கூறியதுடன் அதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்து தருவதாகவும் அந்த மாற்றுத் திறனாளியிடம் தெரிவித்தமையால் அவர் அக்கடையை அகற்ற இணங்கியுள்ளார். இதனையடுத்து அவரது கடை அகற்றப்பட்டு தொழில் உபகரணங்கள் அனைத்தும் ஒரு கரையோரமாக போடப்பட்டுள்ளது.

கடை அகற்றப்பட்டதால் குறித்த மாற்றுத் திறனாளி தொழில் இல்லாது பெரும் பாதிப்புற்ற நிலையில் பல தடவைகள் அந்தப் பகுதி கிராம சேவகரிடம் சென்று தனது நிலைமையை எடுத்துக் கூறி உங்களது உறுதி மொழியை நம்பியே நான் எனது தொழில் இடத்தை அகற்ற இணங்கினேன் எனக்கு ஏதாவது மாற்று நடவடிக்கை எடுத்து தாருங்கள் என கோரியுள்ளார்

ஆனாலும் அவரது கோரிக்கை தொடர்பில் அக்கறைகொள்ளாது இருந்த கிராமசேவகர் அவரை பல தடவை ஏளனம் செய்து அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பெண் கிராம சேவகரை சந்தித்து தனது நிலைமையை சொல்லி தீர்வு தருமாறு கோரிய அந்த மாற்றுத் திறனாளியிடம் நீ போய் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் பிச்சை எடு என்று துரத்தியடித்துள்ளார்.

இதனால் குறித்த மாற்றுத்திறனாளி அதிர்ச்சியடைந்ததுடன் பெரும் விரக்தியின் உச்சத்துக்கு சென்றுள்ளார்.

இதனிடையே வலிமேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர்களும் பொருளாதார உத்தியோகத்தர்களும் அதிகளவான அதிகார துஷ்பிரயோகங்களிலும் மக்களை அவமதிப்பதிலுமே ஈடுபட்டுவருவதாக குறித்த பிரதேசத்தின் கல்விமான்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இதற்கு எடுத்துக்காட்டாக வட்டுக்கோட்டை பிரதேசத்தில் அண்மையில் நடந்த பொருளாதார உத்தியோகத்தரது மோசடி சம்பவம் ஒன்று பற்றி தெவித்தனர்.

அதாவது வட்டுக்கோட்டை பிரதேசத்தில் உள்ள ஒரு பெண் பொருளாதார உத்தியோகத்தர் ஒருவர் மக்களுக்காக வந்த வீட்டுத் திட்டம் மற்றும் கட்டட பொருட்கள் உள்ளிட்ட பலவற்றை தனக்கு வேண்டியவர்களிடம் வழங்கி இலஞ்சம் பெற்றதாகவும் அனர்த்த நிவாரண பொருட்கள் வழங்கும் போது பலரது பெயரை உள்வாங்கி தான் அவற்றை எடுத்து வந்ததாகவும் ஆனாலும் அவ்வாறு களவாடப்பட்டு வந்த நிலையில் ஒரு பயனாளியிடம் அவர் மாட்டியதால் குறித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருந்த நிலையிலும் வலிகாமம் மேற்கு பிரதேச செயலகம் அதை தனக்குள்ளேயே மூடி மறைத்துக்கொண்டு மக்களது வாழ்வாதார திட்டங்களை இவ்வாறான கிராம சேவகர்கள் மற்றும் பொருளாதார உத்தியோகத்தர்கள் திருடி ஏப்பமிடுவதற்கு வழி வகை செய்து வருகின்றனர் என்று தெரிவித்தனர்.

வட பகுதியை பொறுத்தளவில் கிராம உத்தியோகத்தர்களாக உள்ளவர்கள் கல்வித்தரம் அற்றிருந்தும் ஏதோ ஒருவகையில் வால் பிடித்தே பதவிக்கு வந்தவர்கள் என்பதால் அவர்களில் பலர் தகுதியற்ற செயற்பாடுகளையே காட்டி வருகின்றனர் என்றும் பொருளாதார உத்தியோகத்தர்களை பொறுத்தளவில் பட்டப்படிப்பை மேற்கொண்டாலும் இவ்வாறான மோசடிகளை மேற்கொள்ளவே இப்பகுதிகளுக்கு அரசியல் செல்வாக்கை கொண்டு பெற்று மக்களின் அபிலாஷைகளை ஏப்பமிட்டு வருகின்றனர் என மக்கள் பொதுவாக பேசிவருவதை அறிய முடிகின்றது.

Related Posts