மாற்றுத் திறனாளிகளுக்கு உளவள ஆலோசனை

emalda_gaமாற்றுத் திறளாளிகளுக்கு தேவையான உளவள ஆலோசனைகளை தேவை ஏற்படின் சம்பந்தப்பட்ட பிரதேசங்களுக்கு நேரடியாக வருகை தந்து வழங்குவதற்கு சமூக சேவைத் திணைக்களம் தயராக உள்ளது.

சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி இமெல்டா சுகுமார் இவ்வாறு கூறினார். மணியந்தோட்டம், உதயபுரத்தில் உதவி வழங்கும் நிகழ்வில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

போர்ச் சூழல் மற்றும் விபத்து போன்ற காரணங்களாலும் பிறப்பாலும் அங்கங்களை இழந்தவர்கள் அல்லது செயலிழந்தவர்கள் உடல் ரீதியாகப் பாதிப்படைந்துள்ளனர். இவர்கள் உளரீதியான பாதிப்புக்களைச் சந்தித்து வருகின்றனர்.

இதற்கான மாற்றுச் செயற்றிட்டமாக சமூக சேவைகள் அமைச்சின் உளவள ஆலோசகர்களாகக் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஊடாக பாதிப்படைந்த நபர்களுக்கு உளவள ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இவ்வாறு பாதிப்படைந்த நபர்கள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமூக சேவைகள் அமைச்சு பிரதேச பாகுபாடு காட்டாமல் தனியாக மாற்றுத் திறனாளிகளின் உடல் உளநல மேம்பாட்டை மட்டும் கருத்தில் கொண்டு அவர்களது எதிர்காலத்தையும் வாழ்நாளையும் சுபீட்சமாகப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான உளவள ஆலோசனைகளை வழங்கத் தயாராக உள்ளது.

இதுதொடர்பாக மாற்றுத்திறனாளிகள் வதியும் பிரதேசத்தைச் சார்ந்த பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவகர்கள் தமது தேவை தொடர்பான விவரத்தை சமூக சேவைகள் அமைச்சுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த விவரங்களின் அடிப்படையில் உடனடியாக தொடர்புடைய பிரதேசத்துக்கு நேரடியாக உளவள ஆலோசகர்கள் வருகை தந்து பாதிக்கப்பட்ட மாற்றுத் திறளாளிக்கு உளவள ஆலோசனைகளை வழங்கத் தயாராகவுள்ளனர். என்று தெரிவித்தார்.

Related Posts