‘சுயநலன்களுக்கு அப்பால் சமூகப் பொறுப்புடன் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வழங்குவதற்கு அனைவரும் முனவரவேண்டும்’ என்று வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி நளாயினி இன்பராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் நடைபெற்ற தொழிற்சந்தையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
‘சமூகசேவைத் திணைக்களத்தின் பயனாளிகளாக இந்த மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு தேவையான பல செயற்திட்டங்கள் எமது அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவர்களின் ஆயுள் காலம் முடியும் வரை அவர்களுக்கென மாதாந்தம் 3000 ரூபா வழங்கப்பட்டு வருகின்றது. இருந்தாலும் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் அவர்கள் தொழிற்துறையைத் தேடவேண்டிய தேவை ஏற்படுகின்றது.
சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளும் தங்கள் ஏனையவர்களுக்கு சழைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தக்காட்டவேண்டும். மாற்றுத்திறனாளிகளிடம் ஏனையவர்களைவிட திறமைகள் இருக்கின்றன. அவற்றை நாங்கள் இனங்கண்டு அவர்களுக்குரிய வாய்ப்புக்களை வழங்கும்போது அவர்களிடம் இருந்து நிறைய விடயங்களை நாங்கள் பெற்றுக்கொள்ளமுடியும்.
இந்த மாற்றுதிறனாளிகளுக்கு தொழில் வழங்குவதற்கு பலரிடம் அணுகியபோது சிலர் மட்டுமே இவர்களுக்கான தொழில் வாய்ப்பை வழங்க முன்வந்துள்ளார்.
இவ்வாறான மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வழங்குவதற்கு சுயநலன்களுக்கு அப்பால் சமூகப்பொறுப்புடன் தொழில் வழங்குனர்கள் முன்வரவேண்டும்’ என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்தி