மாற்றம் வரவேண்டுமானால் சர்வதேச பொறிமுறையுடனான விசாரணை அவசியம்!

இந்த நாட்டில் ஒரு மாற்றம் வரவேண்டுமாக இருந்தால் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் தொடர்பாக சர்வதேச பொறிமுறையுடன் கூடிய விசாரணை அவசியம் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா பிராந்திய சுகாதார பணிமனையின் கட்டடத்தை நேற்று முன்தினம் வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

இன்றைய சூழ்நிலையில் அபிவிருத்தியை ஒரு பக்கம் பார்த்துக் கொண்டிக்கும், அதேவேளை எங்களுடைய தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டம் ஒரு முக்கியமான இடத்தை எட்டியுள்ளது. இன்று இலங்கையில் தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. 38 வருடங்களுக்கு பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சி பதவியை பெற்றிருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் பெற்றுக் கொண்டுள்ளார்.

எனவே, இந்த புதிய அரசியல் கலாசாரம் எங்களுடைய தமிழ் பேசுகின்ற மக்களினுடைய உரிமைப் போராட்டத்தையும் உரிமைகளையும் பெறவேண்டிய காலமாக எதிர்வரும் 5 வருடங்கள் அமையப் போகிறது. அப்படி ஒரு மாற்றம் வரவேண்டுமாக இருந்தால் இந்த நாட்டிலே கடந்த காலத்தில் இடம்பெற்ற மனிதகுலத்திற்கு எதிரான யுத்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்யப்பட வேண்டும்.

இவை பற்றி பல விடயங்கள் இப்போது பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது.தமிழ் மக்கள் கடந்த காலத்தில் பல தடவை ஏமாற்றப்பட்டுள்ளார்கள். எனவே சர்வதேசத்தின் பொறிமுறையுடன் கூடிய தமிழ் இனத்திற்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு எதிராக விசாரணை செய்யப்பட வேண்டும். சர்வதேச விசாரணை மூலம் இதற்கு தீர்வு கிடைக்க வேண்டும். தமிழ் மக்களின் தீர்வுக்காக மாகாண சபையும், நாடாளுமன்றமும் ஒன்றுபட்டு செயற்பட்ட வேண்டும். இதன் மூலம் ஒன்று பட்ட நாட்டுக்குள் நாங்களும் ஒரு தேசிய இனமாக வாழவேண்டும் – என்றார்.

Related Posts