மார்பக புற்றுநோயிலிருந்து தப்பித்துக் கொள்வோம்

இலங்கையில் பெண்களில் அதிகளவாக (22 வீதம்) ஏற்படும் புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் காணப்படுகின்றது. இது பெண்களில் மட்டுமல்லாமல், மார்பக புற்றுநோயின் 1 வீதம் ஆனது ஆண்களிலும் ஏற்படுகின்றது. மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் பூரணமாகக் குணப்படுத்த முடியும். இதனை ஆரம்ப நிலையில் கண்டறிவதற்கு சுய மார்புப் பரிசோதனை உதவுகின்றது.

மார்பக புற்றுநோயின் அறிகுறிகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

  • வலியற்ற மார்பக கட்டிகள் அல்லது திடீரென அளவில் அதிகரிக்கும் கட்டிகள்
  • ஒரு பக்க மார்பகத்தின் பருமன் அசாதாரணமாக அதிகரித்தல்
  • மார்பகத்தோல் தோடம்பழத் தோலினை ஒத்ததாக இருத்தல்
  • மார்பகத்தில் புண் அல்லது நீண்டகாலம் மாறாத புண்கள்
  • முலைக்காம்பு வழமையைவிட அசாதாரணமான நிலையில் காணப்படுதல் (உள்ளிழுக்கப்பட்டிருத்தல் அல்லது ஒரு பக்கத்திற்கு திரும்பியிருத்தல்)
  • அக்குள் பகுதியில் நிணநீர் முடிச்சுக்கள் வீக்கமடைந்திருத்தல்.

மார்பகப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியக்கூற்றினை அதிகரிக்கும் காரணிகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

  • ஏற்கனவே ஒரு பக்க மார்பகத்தில் புற்றுநோய் ஏற்பட்டிருத்தல்
  • மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நெருங்கிய உறவினர்களைக் கொண்டிருத்தல்.
  • 50 வயதிற்கு மேற்ப்பட்ட பெண்கள்
  • அதிகளவு ஈஸ்ரோஜன் ஒமோன் சுரப்பு உள்ளவர்கள்
  • மிகக்குறைந்த வயதில் பூப்படைதல்
  • மிகக்கூடிய வயதில் மாதவிடாய் நிறுத்தம்
  • பிந்திய வயதில் முதல் கர்ப்பந்தரித்தல் (30 வயதிற்கு மேல்)
  • குழந்தைகள் இல்லாதவர்கள்
  • தாய்பாலூட்டாதவர்கள்
  • ஈஸ்ரோஜன் மட்டும் உள்ள கருத்தடை மாத்திரைகளை 5 வருடங்களுக்கு மேல் பாவித்தல்
  • மாதவிடாய் நிறுத்தத்தின் பின் ஓமோன் மாத்திரைகளை பாவிப்பவர்கள் (Hormone replacement therapy)
  • உடற்பருமன் அதிகரித்தவர்கள்
  • அதிகளவு கொழுப்புணவுகளை உள்ளெடுப்பவர்கள்.
  • மதுபானம் அருந்துதல்
  • புகைப்பிடித்தல்

பாதுகாப்பு முறைகள்

  • உடல் நிறையை உயரத்திற்கேற்ப பேணுதல்
  • அதிக கொழுப்புள்ள உணவுகள், புகைப்பிடித்தல், மதுபானம் அருந்துதல் என்பவற்றைத் தவிர்த்தல்.
  • சுயமார்புப் பரிசோதனையின் போது மேலுள்ள அறிகுறிகள் தென்பட்டால் காலம் தாழ்த்தாது வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளல்
  • நெருங்கிய உறவினர்கள் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருப்பின் தகுந்த வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளல்.


மார்பகப்புற்று நோய்க்கான சிகிச்சை முறைகள்

மார்பகப்புற்று நோயின் சிகிச்சையில் சத்திரசிகிச்சையே முக்கிய பங்கு வகிக்கின்றது. அதை விட கீமோதிரப்பி (Chemotherapy) கதிர்வீச்சு சிகிச்சை, ஒமோன் சிகிச்சை என்பன பயன்படுத்தப்படுகின்றன.

சத்திரசிகிச்சையின் போது, புற்றுநோயின் பாரதூரம் மற்றும் பரவியுள்ள தன்மைக்கேற்ப மார்பகம் முழுவதும் அல்லது மார்பகத்தின் ஒரு பகுதி மாத்திரம் வெட்டி அகற்றப்படுகின்றது. இதன் பின்னர் மார்பக மீளமைப்பு சிகிச்சை ( Breast reconstruction surgery) மூலம் மார்பகம் போன்ற அமைப்பு உருவாக்கப்படும்.

சுயமார்புப் பரிசோதனையை எவ்வாறு செய்தல்

சுயமார்புப் பரிசோதனையானது ஒருவர் தனக்குத்தானே செய்யக்கூடிய பரிசோதனை முறையாகும். ஒரு தடவை இதனைச் செய்வதற்கு 7 -10 நிமிடங்கள் செலவிடப்படுகின்றது. மாதவிடாய் ஏற்படும் பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டு 5ம் நாளிலும், மாதவிடாய் ஏற்படாதவர்கள் மாதத்தின் குறிப்பிட்ட ஒரு நாளில் ஒவ்வொரு மாதமும் செய்யவேண்டும்.

முதலில் கைகள் இரண்டையும் பக்கவாட்டில் தொங்கவிட்டவாறு கண்ணாடியின் முன் நின்று இரண்டு மார்பங்களையும் அவதானிக்க வேண்டும். இதன் போது மார்பங்களில் ஏதாவது வீக்கம், சிவந்த தோல், பள்ளங்கள் (dimpling) , புண்கள், முலைக்காம்பில் மாற்றம் போன்றவற்றை அவதானிக்க வேண்டும். இதே போன்று கைகளை தலைக்குப் பின்புறமாகவும், இடுப்பில் வைத்தும் மீள அவதானிக்க வேண்டும். அதன் பின்னர் மார்பகங்களை விரல்களின் (2ம், 3ம், 4ம்) தட்டையான பகுதியினால் ஏதாவது கட்டிகள் உள்ளனவா என அழுத்திப் பார்க்க வேண்டும். இச் செயன்முறை மார்பகத்தின் வெளிப்புறத்திலிருந்து முலைக்காம்பினை நோக்கி சுருளி வடிவிலோ அல்லது முலைக்காம்பிலிருந்து வெளிநோக்கி ஆரை வடிவிலோ செய்யவேண்டும். அதன் பின்னர் அக்குள் பகுதியில் நிணநீர் முடிச்சு வீக்கம் உள்ளதா எனபரிசோதிக்க வேண்டும். இறுதியாக முலைக்காம்பினை மெதுவாக அழுத்தி ஏதாவது திரவம் அல்லது இரத்தக்கசிவு உண்டா எனப் பரிசோதிக்க வேண்டும்.

எனவே சுயமார்ப்புப் பரிசோனையின் மூலம் மார்பகப்புற்று நோயினை ஆரம்பநிலையில் இனங்கண்டு மார்பக இழப்பினை, மரணத்தை தள்ளி வைப்போம்.

Dr.ஷம்பிகா இராஜரட்ணம்
நீரிழிவு சிகிச்சை நிலையம்
யாழ் போதனா வைத்தியசாலை

 

ஏனைய கட்டுரைகளுக்கு…

Related Posts