மார்ச் மாதத்தில் ஜனாதிபதி தேர்தல்!

vote-box1[1] (1)அடுத்தவருடம் மார்ச் மாதமளவில் நாட்டில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

அதாவது அடுத்தவருடம் ஜனவரி மாத இறுதிப் பகுதியில் இடம்பெறலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல் மார்ச் மாதத்துக்கு பிற்போடப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஜனவரி மாதம் பாப்பரசர் பிரான்சிஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்தே தேர்தலை மார்ச் மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காரணம் தேர்தல் நடக்கின்ற காலப்பகுதியில் பாப்பரசர் எந்தவொரு நாட்டுக்கும் விஜயம் செய்வதில்லை. எனவே இந்தக் காரணத்தைக் கருத்திற்கொண்டு ஜனவரி மாதத்தில் பாப்பரசரின் வருகைக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 28 ஆவது கூட்டத் தொடரும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. அந்தவகையில் 28 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசாரணைக் குழுவின் விசாரணை அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அந்தவகையில் மார்ச் மாதத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதன் மூலம் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கைக்கு எதிராக மக்களின் ஆணையை பெற முடியும் என்றும் அரச தரப்பில் எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில் மார்ச் மாதத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கே சாத்தியம் அதிகம் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை நடைபெறப்போகும் ஜனாதிபதி தேர்தலில் தாமே வெற்றிபெறப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வியூகங்களை அமைப்பதில் பிரதான கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்துவருகின்றன.

Related Posts