மார்ச் மாதத்திலிருந்து யாழிற்கு ரயில்சேவை! – அமைச்சர் பசில் ராஜபக்ஷ

pasil-rajapakshaஅடுத்தவருடம் மார்ச் மாதத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில்சேவை காங்கேசன்துறைவரையிலும் நடைபெறுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சுன்னாகத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் 8 மாகாணங்களிலும் அந்தந்த மாகாண மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளினால் மாகாணசபைகள் நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில் வடமாகாணசபைக்கான தேர்தலை நடாத்தி அதனூடாக அதன்நிர்வாகத்தை வழங்கும் பொருட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் மாகாணசபைத் தேர்தலை எதிர்வரும் 21ம் திகதி நடத்துவதற்கான வாய்ப்பினை முதன் முதலாக வழங்கியுள்ளார்.

இந்நிலையில் உங்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்படவுள்ள இந்த மாகாணசபையூடாக நீங்கள் பெற்றுக் கொள்ளக் கூடிய நன்மைகளையும் அதனூடான மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு பலம், சேவை, திறமை என்ற ரீதியிலான பிரதிநிதிகளை நீங்கள் தெரிவு செய்ய வேண்டும்.

அதனூடாக உங்கள் பிள்ளைச் செல்வங்களுக்கு நல்ல கல்வியை புகட்டமுடியுமென்பதுடன் விவசாயம், கடற்றொழில், கைத்தொழில்துறை உள்ளிட்ட தொழிற்துறைகளை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் அதனூடாக துறைசார்ந்தவர்களது வாழ்வாதாரத்தையும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் அவற்றுக்கான சந்தைவாய்ப்பின் ஊடாக மேம்படுத்த முடியும்.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் மாகாணசபையை நிர்வகிக்கக்கூடிய பலமோ திறமையோ மக்கள் மீதான அக்கறையோ இல்லையென்பதற்கு அப்பால் அவர்களால் ஆட்சியை சரியான முறையில் நிர்வகிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் உள்ளுராட்சிசபைகள் சரியானமுறையில் இயங்கவில்லையென்பதற்கான சாட்சிகளையும் இதன்போது எடுத்து விளக்கினார்.

அந்தவகையில், இப்பகுதியின் பல்வேறு அபிவிருத்தி பணிகளை மத்திய அரசின் நிதியுதவியுடனேயே முன்னெடுத்து வருகின்றோம். குறிப்பாக தென்பகுதியிலிருந்தான லக்சபானா மின்சாரம் விநியோக திட்டங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி சுன்னாகத்திலுள்ள மின்பரிமாற்று நிலையத்தை ஜனாதிபதி அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே முக்கியத்துவம் வாய்ந்த வடக்கிற்கான மற்றுமொரு அபிவிருத்தியாக யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை அடுத்தாண்டு மார்ச் மாதம் முதல் காங்கேசன்துறை வரை இடம்பெறவுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள், இவ்வாறான அபிவிருத்தி செயற்திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகின்ற போதிலும் அவற்றை குறைசொல்லுவதிலும் பிழைகண்டுபிடிப்பதிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக ஏ9 வீதி புனரமைக்கப்பட்ட போதும் சுன்னாகத்தில் மின்பரிமாற்று நிலையத்தை அமைக்கும் போதும் இவ்வாறுதான் அவர்கள் குறைகூறி வந்த போதிலும் நாம் பலகோடிரூபாய்களை செலவிட்டு எமது மாணவர்கள் குப்பிவிளக்கில் கல்வி கற்காது மின்விளக்கில் சிறப்பாக கல்விகற்க வேண்டுமென்பதற்காக மின்விநியோக திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே குறிப்பாக ஏ9 வீதியில் வவுனியா ஒமந்தையிலுள்ள சோதனைசாவடி எதிர்காலத்தில் இருக்க மாட்டாது எனவும் அவ்வாறு எதிர்காலத்தில் சோதனை சாவடி அமைவதற்கு இடமளிக்கப் போவதில்லையென்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

இந்நிலையில் மக்கள் அமைதி சுதந்திரம் அபிவிருத்தி மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய வகையில் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் நினைவில் நிறுத்தி எதிர்காலம் தொடர்பாக சிந்தித்து அபிவிருத்தியையும் மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு எமக்கு வாக்களிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

இப்பிரசார கூட்டத்தில் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன், ஈ.பி.டி.பியின் சார்பில் ஐ.ம.சு.முன்னணியின் வேட்பாளர்களான கந்தசாமி கமலேந்திரன், சின்னத்துரை தவராசா, நாகன் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Posts