தமிழ் இளையோர்கள் அரசின் சதிவலைக்குள் சிக்காது விழிப்புடன் செயற்படவேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார்.
கைதடிமத்தி குமரநகர் சனசமூக நிலைய, நிறைமதி முன்பள்ளியின் விளையாட்டுவிழா நேற்று இடம்பெற்றது.
இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வறுமை நிலையில் இருக்கின்ற எம் உறவுகளின் நிலையை சாதகமாக்கி தமிழ் இளையோருக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் ஏனைய வசதிகளும் வழங்கப்படும் என்பதான மாயைக்குள் இன்றைய ஆளும் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அத்துடன் அவர்களுக்கு மூளைச்சலவையும் செய்து சிவில் வேலை வாய்ப்புக்களை வழங்காமல், இராணுவத்திற்கு உள்ளீர்க்கும் படுபயங்கரமான ஒரு நிகழ்ச்சி நிரலை, திட்டமிட்ட ரீதியில், தமிழர் வாழும் பிரதேசமெங்கும் அரங்கேற்றி வருகிறது. இந்த அபாயகரமான அரசின் சதிவலைக்குள் எந்தவொரு உண்மையான தமிழ் இளையோர்களும் எவ்விதத்திலும் சிக்கி விடாமல் விழிப்புடன் உண்மை நிலையை உணர்ந்து செய்ற்படவேண்டும்.
இன்று நாங்கள் நின்று கொண்டிருக்கும், இந்த சனசமூக நிலைய திறப்புவிழாவில் கடந்தவருடம் நான் கலந்துகொண்டேன். அப்போது இந்த சனசமூக நிலையத்துக்கு மறைந்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ந.ரவிராஜ் அவர்கள் அடிக்கல நாட்டியிருந்தமை பற்றி அறிந்தேன்.
அதன்படி அவருடன் இணைந்து செயற்பட்ட இந்த ஊரின் முக்கியஸ்தர்கள் தான் இந்த சனசமூக நிலையத்தின் நிர்வாகிகளாக உள்ளனர். இந்தநிலைமையானது இன்று இந்த முன்பள்ளியில் கல்வி கற்கும் சிறார்கள், நாளை நல்ல தேசிய உணர்வாளர்களாக, மொழிப்பற்றாளர்களாக வருவார்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.
ஆனால் இப்படியான சமூகங்களை திசைமாற்றி, சீரழித்து இனப்பற்றுள்ள, தமிழ்த்தேசியப்பற்றுள்ள இளையோர்களை வேலைவாய்ப்பு எனும் மாயையின் கீழ் இனத்துக்கு எதிரானவர்களாக மாற்றும் செயற்பாடுகளை அரசாங்கம் திட்டமிட்டு முடுக்கி விட்டுள்ளது.
ஆனால் தனிப்பட்ட தேவைகளை மனதிற்கொண்டு அல்லது அவர்களுடைய ஆசை வார்த்தைகளுக்கு எடுபட்டு யாராவது இவ்வாறான வரலாற்றுத்துரோகத்தை இழைப்பார்களேயானால் அவர்களை ஒரு பொழுதும் எந்தவொரு தமிழ்மகனும் ஏற்றுக்கொள்ளவோ, மன்னிக்கவோ மாட்டான்.
ஆகவே எமது இளையோர்கள் அரசாங்கத்தின் திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலை விளங்கிக்கொள்வதுடன், ஏனைய நண்பர்களுக்கும் விளக்கி, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க ஒன்றுதிரளவேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் ஜெ.சிற்சபாநாதன், சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர், கைதடி சேதுகாவலர் வித்தியாலய அதிபர் இ.திருஞானசிவம், மற்றும் சனசமூக நிலைய செயலாளர் வ.ரவீந்திரன், மற்றும் ஊர் மக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.