கணவனின் அம்மாவுடைய (மாமி) ஏ.டி.எம் அட்டையை திருடி, 1 இலட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கியில் இருந்து எடுத்த மருமகளை நாளை வெள்ளிக்கிழமை (27) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவகுமார், புதன்கிழமை (25) உத்தரவிட்டார்.
பருத்தித்துறை, தும்பளையிலுள்ள கணவனின் தாயார் வீட்டுக்குச் கடந்த 18 ஆம் திகதி சென்றிருந்த சந்தேகநபரான பெண், மாமியாரின் கைப்பையிலிருந்து ஏ.டி.எம். அட்டையை திருடிச் சென்றுள்ளார். கூடவே இரகசிய இலக்கத்தையும் டயரியில் பார்த்து தெரிந்துக்கொண்டுள்ளார்.
பின்னர், ஏ.டி.எம் அட்டையை பயன்படுத்தி, பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளிலுள்ள ஏ.டி.எம். இயந்திரங்கள் ஊடாக 1 இலட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளார்.
ஏ.டி.எம். அட்டை திருட்டுபோன நிலையில் அதிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வங்கியின் ஊடாக அறிந்த மாமி, இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் ஏ.டி.எம். அட்டையைத் திருடி பணம் எடுத்தது, மருமகள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, தாங்கள் சமரசத்துக்கு வருவதாக மாமியும் மருமகளும் பொலிஸாரிடம் கூறினர்.
எனினும், சந்தேகநபரான மருமகளை பொலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்செய்தனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு குழந்தையொன்று உள்ளமை குறிப்பிடத்தக்கது.