பிரதேச சபை தவிசாளர்கள் விட்ட பிழைகளுக்கு கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என மானிப்பாய் பிரதேச சபையின் தமிழரசு கட்சி உறுப்பினர் கௌரி காந்தன் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார்.
மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் பல்வேறு ஊழல்களை மேற்கொண்டு வரும் நிலையில் ஏனைய உறுப்பினர்களினால் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டன. அந்த நிலையில் கட்சி நடவடிக்கை எடுக்க முடியாதிருக்கின்றதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதேச சபை தவிசாளரினால் இரு தடவைகள் வரவு செலவு திட்டம் 16 அங்கத்தவர்களினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் இரு தடவைகள் பிரதேச சபையில் வரவு செலவு திட்டம் நிராகரிக்கப்பட்டதென்பது முதன் முறையாக நடைபெற்ற விடயம்.
மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் மேற்கொண்ட ஊழல் விடயங்கள் உள்ளுராட்சி திணைக்களத்தில் முறையிட்ட வேளையில் கூட உள்ளுராட்சி திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கட்சி அபிப்பிராயங்கள் மற்றும் கட்சியின் திருத்தங்களுக்கு அமைவாக இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தான் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், தேர்தல் வரும் காலம் வரைக்கும் கட்சி எதிர்பார்த்துக் கொண்டு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.