வீதியில் பெண்கள் மீது சேட்டை புரிந்த பாடசாலை மாணவர்களை அழைத்து பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் தண்டித்திருந்த நிலையில் மறுநாள் பாடசாலைக்குள் நுளைந்த மாணவன் ஒருவரின் தந்தை பெரும் குரல் எழுப்பி அதிபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அதிபரை மன்னிப்புக் கோரவைத்த சம்பவம் மானிப்பாயில் இடம்பெற்றுள்ளது.
மாணவர்கள் தறுதலைகளாக மாறுவதற்கு பெற்றோரின் இவ்வாறான செயற்பாடுகளே காரணம் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது.
மானிப்பாயில் ஒரு பிரபல பாடசாலை மாணவர்கள் மூவர் நேற்று முன்தினம் பாடசாலை முடிவுற்று மருதடி பிள்ளையார் சுற்றாடலில் பிற பாடசாலை மாணவ மாணவிகளை குறி வைத்து முட்டாள் தினத்தை முன்னிட்டு மை(Ink) தெளித்து குறும்புத்தனம் செய்துள்ளனர். இறுதியில் இச் சம்பவம் கோஸ்ரி மோதலாக மாற்றம் அடைந்துள்ளது.
இதை அவதானித்த ஒருவர் பாடசாலைக்கு தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி இவர்களின் செயலை கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து அவர்களை மீண்டும் அப்பகுதியிலிருந்து பாடசாலைக்கு அழைத்து ஒரு ஆசிரியரால் கடுமையாக தண்டிக்கப்பட்டுள்ளனர்.
அடிவாங்கிய மூவரில் ஒரு மாணவனின் பெற்றோர் நேற்றுக் காலை கல்லூரிக்கு வந்து அதிபருடன் கடுமையாக முரண்பட்டுக்கொண்டுள்ளார். மாணவனின் தந்தை அதி உச்ச ஆக்ரோசம் அடைந்து அதிபருடன் கருத்து மோதலில் ஈடுபட்டதோடு பாடாசாலைக்கு வெளியில் நடந்த சம்பவத்துக்கு நீங்கள் எவ்வாறு தண்டிக்கலாம்? எனக் கோரியதோடு
பிரம்பால் காலில் அடித்து ஏற்பட்ட தழும்பை போனில் பதிவேற்றி இவ்வாறு அடிக்க யார் உங்களுக்கு அனுமதியளித்தது. தண்டித்த ஆசிரியரை நான் பார்க்கவேண்டும் என பலத்த சத்தத்தை எழுப்பி தந்தை அல்லோகலபடுத்தினார்.
தொடர்ந்து தனது மகனுக்கு அடித்ததற்காக குறித்த ஆசிரியரும் அதிபரும் மன்னிப்புக் கோரவேண்டும் எனவும் எச்சரித்தார். இதனையடுத்து நிலமையைச் சமாளிக்க முடியாது திணறிய அதிபர் எமது பாடசாலை சீருடையில் மாணவர்கள் இவ்வாறு நடந்துள்ளனர் அதனால் தான் தண்டித்தோம் எனக் கோரியதோடு நடந்த சம்பவத்துக்கு ஆசிரியர் சார்பாக மன்னிப்பு கோரினார்.
எனினும் மீண்டும் முரண்பட்டுக் கொண்ட தந்தையார் தவறை இழைத்து விட்டு மன்னிப்பு கோரினால் பிழையை சரி செய்யமுடியுமா என ஆக்ரோசமாக கத்தினார். மகனை தண்டித்த ஆசிரியரை இனம் காட்டுங்கள் அவரை நான் பார்க்கவேணும் என உரத்து கத்தினார்.
அந்த ஆசிரியர் பாடசாலை விடயமாக வெளியே சென்றுவிட்டார் என அதிபர் கூறியபோதிலும் எவ்வளவு நேரமானாலும் பறவாயில்லை குறித்த ஆசியர் வரட்டும் அதுவரை நான் காத்திருக்கிறேன் எனக் கூறிய குறித்த மாணவனின் தந்தை தனது மகனுக்கு அடித்த ஆசிரியருக்கு தான் யார் என காட்டாமல் விடமாட்டேன் என கூறிச் சென்றார்.