யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவாலி பகுதியில் வியாபார நிலையமொன்றின் மீது நடத்தப்பட்ட வாள் வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்றுமுன்தினம் இரவு மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவாலி சிந்தாமணி பகுதியில் உள்ள வியாபார நிலையமொன்றின் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த எட்டு பேரே இத் தாக்குதலை நடாத்தியதாக சம்பவத்தை நேரில் கண்ட சிலர் தெரிவித்துள்ளனர்.
இத் தாக்குதல் சம்பவத்தின் போது குறித்த வியாபார நிலையத்திற்கு சென்றிருந்த சத்தியதாசன் ராஜநேசன் (வயது 24) இளைஞன் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் சம்பவமானது குறித்த படுகாயமடைந்த இளைஞனது வேலைத்தலத்தில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாகவே இவ் இளைஞனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் மானிப்பாய் காவல்துறை ஒருவரை கைது செய்ததுடன் இது தொடர்பான விரிவான விசாரணையை மானிப்பாய் காவல்துறை மேற்கொண்டுவருகின்றனர்.