“இலங்கையில் வாழும் கிறிஸ்தவ மக்களால் இன்று கொண்டாடப்படும் நத்தார் பண்டிகை இயேசுவின் பிறப்பைக் குறித்து நிற்கிறது. இயேசுவின் பிறப்பு அவர் உலகுக்கு வழங்கிய பிரபஞ்ச அன்பு, சகிப்புத் தன்மை மற்றும் புரிந்துணர்வு என்பவற்றின் போதனையுடன் மானிடர்களின் விடுதலைக் கான வழியைக் காட்டியது என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகும்.” – இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது நத்தார் தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-
“இயேசுவின் வாழ்வு அக்காலத்தில் இருந்த நம்பிக்கைப் பிணைப்புகளிலிருந்து மக்களை விடுவிப்பதற்கான ஒரு முழுமையான அர்ப்பணத்தை வெளிப்படுத்தியதுடன், கிறிஸ்தவ சமயத்தின் போதனைகளைக் கோடிட்டுக் காட்டும் அன்பு, பகிர்வுணர்வு, மன்னிப்பு என்பவற்றைப் பரப்புவதனூடாக ஆன்மீக விடுதலைக்கும் வறுமையிலிருந்து விடுதலை பெறுவதற்குமான வழியைக் காட்டியது.
பொருளாதார சமத்துவமின்மை, வறுமை, சூழலியல் அச்சுறுத்தல்கள் மற்றும் பயங்கரவாதம் போன்று மிகப் பெரும் சவால்களுக்கு முகம்கொடுத்திருக்கும் இன்றைய உலகம், இயேசுவின் பிறப்பைக் கட்டியம் கூறிய பெத்லஹேம் நகரில் தோன்றிய நட்சத்திரத்துடன் ஆரம்பமான அன்பு, சகிப்புத்தன்மை என்ற கிறிஸ்தவ போதனையிலிருந்து பெரும் நன்மையடைய முடியும்.
எல்லா உயிரினங்களிடத்திலும் அன்பு, அடக்கம் என்ற கிறிஸ்தவ மானிடச் செய்தியை இயேசுவின் பிறப்பு தொழுவமொன்றிலேயே நிகழ்ந்ததிலும் இடையர்களே அவருக்கு முதல் முதலில் காணிக்கை செலுத்தியதிலும் காணமுடியும்.
குடும்பங்கள் ஒன்றிணைவதற்கும், சமூக மற்றும் எல்லாத் தடைகளையும் தாண்டி அன்பளிப்புகளைப் பகிர்ந்துகொள்வதற்குமான ஒரு சந்தர்ப்பம் என்ற வகையில் நத்தார் பண்டிகை எல்லா கிறிஸ்தவர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். தேவாலயங்களில் கேட்கும் நாத ஒலியும், பண்டிகைத் திருப்பாடல்களும் இன்று இப்பண்டிகை சுதந்திரமாகக் கொண்டாடப்படுவதைக் குறித்து நிற்கிறது.
இலங்கைவாழ் எல்லா கிறிஸ்தவ மக்களுக்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு நத்தார் பண்டிகைக்கு எனது வாழ்த்துகள்”
இவ்வாறு தனது வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்