டெங்கு நோய்த்தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தின் கீழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட 23 வட்டாரங்களில் திண்மக்கழிவுகள் அகற்றும் பணிகள், வியாழக்கிழமை(01) முதல் முன்னெடுக்கப்பட்டு இந்த மாதம் முழுவதும் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக யாழ். மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வழமையைவிட மேலதிகமாக 50 தொழிலாளர்களையும், 10 உழவு இயந்திரங்களையும் பயன்படுத்தி 7 உபஅலுவலகப் பிரிவுகளின் அனைத்து பிரதேசங்களிலும் சுத்திகரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
முதற்கட்டமாக குருநகர் பகுதியில் திண்மக்கழிவுகள் அகற்றும் பணி வியாழக்கிழமை (10) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கழிவகற்றும் பணி ஆரம்பிப்பதற்கு ஒருநாள் முன்னதாக குறிப்பிட்ட பிரதேச பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல்கள் கொடுக்கப்படும். அக்காலப்பகுதியில் அனைத்து மக்களும் தங்கள் வீட்டில் இருந்து அகற்றப்படவேண்டிய திண்மக்கழிவுகளை தொழிலாளர்கள் சேகரிப்பதற்கு ஏதுவாக அப்புறப்படுத்தி வீட்டுக்கு வெளியில் வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
குறித்த பிரதேசத்தில் முற்றுமுழுதாக திண்மக்கழிவுகள் அகற்றப்பட்ட பின்னரே அடுத்த பிரதேசத்தில் கழிவகற்றும் பணி ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.