அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்துவாழும் மாணிக்கமடு கிராமத்தின் அருகே உள்ள மாயக்கல்லி மலைமீது அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு பிக்குகள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை திடீரென அப்பகுதிக்கு வந்த புத்த பிக்குகளால் தமிழ்க்கிராமமான மாணிக்கமடுவை அடுத்த மாயக்கல்லி மலை மீது புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டது.
அந்தப் பகுதியில் பௌத்தர்கள் எவரும் வசிக்காத போது அங்கு புத்தர் சிலை அமைக்கப்பட்டமையானது அங்கு வாழும் தமிழ் மக்களிடையே அதிருப்தியையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த அமைச்சர் ரவூப் கக்கீமுக்குத் தெரியப்படுத்தியதையடுத்து அவர் அப்பகுதிக்குச் சென்று ஆராய்ந்துள்ளதுடன், இதனைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டச் செயலகத்தில் கூட்டம் ஒன்றும் நடாத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்துக்கு, இறக்காமம் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், இந்து ஆலய நிர்வாகிகள் மற்றும் புத்தர் சிலை விவகாரத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்குகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ், முஸ்லிம் தரப்புகள் பௌத்தர்கள் வாழாத இடத்தில் புத்தர் சிலை வைப்பது பொருத்தமற்றது எனவும், இதனால் எதிர்காலத்தில் பின்விளைவுகள் ஏற்படலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
ஆனால், அதற்கு புத்த பிக்குகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன், இறக்காமம் பிரதேசத்தில் அகழ்வாராய்ச்சிக்குரிய 19 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றைப் பாதுகாக்கவேண்டிய தேவை தமக்கிருப்பதாகவும் பௌத்த பிக்குகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், இப்பிரச்சனைக்கு சுமுகமாகத் தீர்வுகாணும் முகமாக தமிழ், முஸ்லிம், பௌத்த பிக்குகள் அடங்கிய 15பேர் கொண்ட குழுவொன்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் நியமிக்கப்பட்டுள்ளது.