Ad Widget

மாணவியை கடத்தியவர்களுக்கு பிணை!

தனியார் கல்வி நிலையத்துக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியை செவ்வாய்க்கிழமை (22) கடத்த முற்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் தலா 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் செல்ல, மல்லாகம் மாவட்ட நீதிவான் ஏ.யூட்சன் புதன்கிழமை (23) அனுமதியளித்தார்.

மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.

குறித்த மாணவி, சித்தங்கேணி பகுதியிலுள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு சென்றுவிட்டு வீடு செல்வதற்காக சித்தங்கேணி சந்தியிலிருந்து பஸ்ஸில் ஏறியபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர், மாணவியை பஸ்ஸில் இருந்து இறக்கி, மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றனர்.

மாணவி முரண்டு பிடிக்க, கடத்தியவர்கள் மாணவியை தாக்கியுள்ளனர். இதன்போது, மாணவி தன்னைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார். இதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள், கடத்திச் சென்றவர்களை பின்தொடர்ந்து சென்று அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

பிடிக்கப்பட்ட கடத்தல்காரர்களையும் மாணவியையும் இளைஞர்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

கடத்தலில் ஈடுபட்டவர்கள் நவாலிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பிரதான சந்தேகநபர் வெதுப்பக வாகனத்தின் சாரதியெனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related Posts