கிளிநொச்சியின் வட்டக்கச்சி, இராமநாதபுரம் மாணவர்கள் பேருந்துகளில் பயணிக்கின்ற போது தொடர்ந்தும் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதி மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களிற்கு மாலை நேர வகுப்புக்களுக்கு சென்று வருகின்ற நிலையில், இவ்வாறான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சி இராமநாதபுரம் கல்மடுநகர் ஆகிய பகதிகளிலும் வன்னேரிக்குளம் ஸ்கந்தபுரம், ஆகிய பகுதிகளிருந்து உயர்தரக்கணித விஞ்ஞான பிரிவுகளிலும் ஏனைய பிரிவுகளிலும் கல்வி கற்றும் மாணவர்கள் மேலதிக கல்வியை பெற்றுக்கொள்வதற்காக கிளிநொச்சி நகரிலுள்ள தனியார் கல்வி நிலையங்களிற்கு செல்கின்றனர்.
இந்த நிலையில், தனியார் கல்வி நிலையங்களில் மாலை நேர வகுப்புக்கள் மாலை 5.30 மணிவரையும் இடம்பெறுவதனால் வகுப்புக்களில் கலந்த கொண்டு தூர இடங்களில் இருந்து செல்லுகின்ற மாணவிகள் கிளிநொச்சியில் இருந்து இரவு 7.00 மணிக்குப் புறப்படுகின்ற பேருந்தில் பயணிக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.
குறித்த பேருந்தில் பயணிக்கின்ற மாணவிகள் மீது தொடர்ந்தும் பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெற்று வருவதாக பாதிக்கப்பட்ட மற்றும் பல்வேறு தரப்புக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த வாரம் மாத்திரம் கிளிநொச்சிப்பகுதியல் நான்கிற்கும் மேற்பட்ட துஸ்பிரயோகச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அண்மையில் கிளிநொச்சிப் பகுதியில் தனியார் கல்வி நிலையைத்திற்குச் சென்று திரும்பிய மாணவியொருவரை பேருந்து நடத்துனர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்த முயற்சித்த வேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.