மாணவிகளிடம் பாலியல் சேஷ்டை புரிந்த பாடசாலை அதிபர் கைது

வவுனியாவில் பாடசாலை மாணவியை பாலியல் ரீதியான சேஷ்டை மேற்கொண்ட பாடசாலை அதிபரை நேற்று (04.01) மாலை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரிற்கு அண்மையில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் அதிபர் கடந்த மாதம் பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு அதிலும் மாணவிகளுக்கு என விசேடமாக வகுப்புக்கள் நடாத்துவதுடன் தேவாரம் பாட கூறி கண்களை மூடி பாடி காட்டவேண்டும் என்றும் அந்நேரத்தில் மாணவிகளிடம் அங்க சேஷ்டைகள் புரிந்துள்ளார்.

இவ் விடயத்தை மாணவிகள் பெற்றோரிடம் கூறியதையடுத்து வலயக்கல்வி பணிமனை, மற்றும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவ சமூகம் சார்பாக பெற்றோர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து குறித்த பாடசாலையினுடைய 53 வயதுடைய அதிபரை பொலிஸார் நேற்று மாலை கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அதிபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலை அதிபரை பிணையில் விடுவிக்க கோரி கல்வித்திணைக்கள அதிகாரிகள் உட்பட ஓரிரு அதிபர்கள் பின் நிற்பதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் இவர்கள் ஏன் இவ்வாறான விடயத்திற்கு துணை போகின்றார்களென பெற்றோர்கள் தமது ஆதங்கத்தினை தெரிவித்துள்ளனர்.

குறித்த அதிபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாது வெளியே விடுவதாக இருந்தால் கிராமமக்கள் ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக பாதிப்படைந்த சமூகம் சார்பாக கிராம மக்கள் கூறியுள்ளனர்.

இப் பிரச்சினையை வெளிக்கொணர்ந்த அப் பாடசாலையின் ஆசிரியையை வேறொரு பாடசாலைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாகவும் சம்பந்தம் இல்லாமல் அவ் ஆசிரியையைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமை ஏனென்ற கேள்வியும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.

குறித்த பாடசாலை அதிபருக்கு முன்பும் இவ்வாறான ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts