மாணவர்கள் மீது வெளி நபர்கள் தாக்குதல்: அதிபர், ஆசிரியர்களின் ஏற்பாடா?

fight-warநீர்வேலிப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை அதிபரும் ஆசிரியர்கள் இருவருமாக சேர்ந்து அப்பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது வெளி ஆட்களை ஏற்பாடு செய்து தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத் தாக்குதல் சம்பவம் நேற்று மாலை 2.30 மணியளவில் பாடசாலை முடிவடைந்து மாணவர்கள் வீடு செல்ல முற்பட்ட போது பாடசாலை வாயில் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

இச் சம்பவம் பற்றி தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலை முடிந்து நாம் வீடு செல்ல முற்பட்ட போது பாடசாலைக்கருகில் ஆட்டோ ,மோட்டார் சைக்கிளில் மது போதையில் நின்றிருந்த 15 க்கும் மேற்பட்டவர்கள் எம் மீது திடீரென தாக்குதல் நடத்த தொடங்கினர். இத் தாக்குதல் நடைபெற்ற போது ஒரு ஆசிரியர் வந்து ஏனைய மாணவர்களை பாடசாலைகுள்ளே அழைத்து வாயில் கதவை மூடிவிட்டார். இதனால் நாம் உள்ளே செல்ல முடியவில்லை

இத் தாக்குதல் சம்பவத்தை அருகில் உள்ள இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினர் அவதானித்துவிட்டு தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு விரைந்த போது தாக்குதல் மேற்கொண்டோர் ஓடிவிட்டார்கள்.

இத் தாக்குதல் சம்பவத்திற்கு பின்னால் பாடசாலை அதிபரும் ஆசிரியர்கள் இருவரும் இருப்பதாக நாம் சந்தேகிக்கின்றோம்.

தாக்குதல் சம்பவத்திற்கான காரணமாக நாம் கருதுவது எம்முடன் கல்வி கற்றும் மாணவர் ஒருவர் பாடசாலைக்கு சமூகம் தராமல் பாடசாலை வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இதனைக் கண்ட அதிபர் மறுநாள் குறித்த மாணவனின் பெற்றோரை பாடசாலைக்கு அழைத்து அவ் மாணவனை பாடசாலையில் இனி சேர்க்க முடியாது என்று பாடசாலையில் இருந்து விளக்கியுள்ளார்.

குறித்த மாணவன் தேவை கருதியே பாடசாலைக்கு சமூகம் தரவில்லை என்று பெற்றோர் பல தடவை எடுத்து கூறியும் அதிபர் அதனை ஏற்கவில்லை. மாணவனை வெளியில் அனுப்பியுள்ளார்.

இதனால் குறித்த மாணவனோடு கல்வி கற்கும் சக மாணவர்களாகிய நாம் 25 பேர் மீண்டும் வெளியேற்றப்பட்ட மாணவனை பாடசாலையில் இணைக்குமாறு வலியுறுத்தி கையெழுத்து இட்டு அதிபருக்கு கடிதம் அனுப்பியிருந்தோம்.

இதன் காரணமாகவே எம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என நாம் சந்தேகிக்கின்றோம். ஏனெனில் எம் மீது தாக்குதல் நடாத்திவிட்டு தாக்குதலாளிகள் தப்பி செல்லுகையில் கடிதத்தில் கையெழுத்து இட்ட அனைவர் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்து சென்றுள்ளனர்.

எனவே இச்சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசாரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அம் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts