கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் கடந்த 21ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, விசாரணை மேற்கொண்டுவரும் தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அறிக்கை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்கப்படும் என தேசிய ஆணைக்குழுவின் செயலர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் கொலை தொடர்பாக இரண்டுபேர் கொண்ட குழுவொன்றை தேசிய காவல்துறை ஆணைக்குழு நியமித்துள்ளது.
பொதுமக்கள் முறைப்பாட்டுப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் ஆனந்த விஜேசூரியவை உள்ளடக்கிய இந்த விசாரணைக் குழு நேற்று யாழ்ப்பாணம் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
நிறுத்துமாறு இடும் உத்தரவை மீறிச் செல்லும் வாகனங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளும் அதிகாரம் காவல்துறையினருக்கு வழங்கப்படவில்லை.
குற்றமிழைத்தவர் என உறுதி செய்யாதவரையில், எந்தவொரு பொதுமகனையும் சுடுவதற்கு காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.
தடுப்பிலுள்ள சந்தேக நபர் ஒருவர் தப்பிச் செல்ல முயன்றால் மாத்திரமே துப்பாக்கிச் சூடு நடத்த முடியும்.
குறித்த மாணவர்கள் படுகொலை தொடர்பான விசாரணை அறிக்கை ஒருவாரத்தில் கையளிக்கப்படும்.
அத்துடன் காவல்துறையினர் குற்றமிழைத்தமை கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீதான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆரியதாச குரே மேலும் தெரிவித்துள்ளார்.