யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் மேலதிக விசாரணை அறிக்கை குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி சவீஸ்கரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டது.
இதன்போது, வழக்கு குறித்த மேலதிக விசாரணை அறிக்கையினை குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிபதியிடம் சமர்ப்பித்துள்ளனர். குறித்த வழக்கு கடந்த 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குற்றப்புலனாய்வு பிரிவினர் வழக்கு அறிக்கையினை இன்னமும் சமர்ப்பிக்காமல் இருப்பது தொடர்பில் நீதவான் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையிலேயே இன்று மேற்படி விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உயிரிழந்த மாணவர்களுக்கான மரண சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பில் பொலிஸ் திணைக்களம் மேற்கொள்ளும் விசாரணை எனக் கூறி பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த காலங்களில் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டு வந்த நிலையில், பொலிஸ் திணைக்களத்தின் விசாரணைகளை நிறுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படின் அது குறித்து நீதிமன்றத்திற்கு அல்லது பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டு, குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.