யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத்திலும் விடுதிகளிலும் பாதுகாப்பற்ற நிலை தொடர்வதாகக் கூறியே இம்மாணவர்கள் வெளியேறி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளில் பெரும்பாலானோர் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் ஆண்கள் விடுதியைச் சேர்ந்த மாணவர்களும் தற்போது வெளியேறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற சம்பாவிதங்களை அடுத்து, மாணவர்களால் அறிவிக்கப்பட்டிருந்த வகுப்பு பகிஷ்கரிப்பைத் தொடர்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தினங்களுக்கு மாத்திரமே இந்த வகுப்பு பகிஷ்கரிப்பைத் தொடர்வதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் பொலிஸாரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தே இந்த வகுப்பு பகிஷ்கரிப்பைத் தொடரப்போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
பல்கலைக்கழகம் மற்றும் விடுதிகளின் வாயில்களில் தொடர்ந்தும் குவிக்கப்பட்டிருக்கும் இராணுவம் மற்றும் பொலிஸார் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ள அதேவேளை, கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் தங்களது வகுப்பு பகிஷ்கரிப்பு தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமை மற்றும் நான்கு மாணவர்களின் கைது நடவடிக்கைக்கு எதிராக நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்றிணைந்த போராட்டத்தை நடத்தவுள்ளனர் என்று அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சஞ்ஜீவ பண்டார தெரிவித்தார் .
அத்துடன், கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கைதான மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.