மாணவர்களுக்கு வீடுகளிலேயே கற்பிக்க விசேட ஏற்பாடுகள்!!

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது பிற்போடப்பட்டுள்ளதால் தொலைக்கல்வியூடாக மாணவர்களுக்கு வீடுகளில் இருந்து கற்பிக்க விசேட ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பாடசாலைகள் நேற்று(09) ஆரம்பிக்கப்பட இருந்தன. ஆனால் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற் கொண்டு இருவாரங்களுக்கு பின்போடப்பட்டுள்ளது.கல்விச் செயற்பாடுகளில் இருந்து மாணவர்கள் தூரமாவதை தடுக்கும் வகையில் விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

பொதுஜனபெரமுன அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,

தொலைக்காட்சி நிகழ்ச்சியூடாக 3 முதல் 13 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மும்மொழிகளிலும் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2700 பாடங்கள் இவ்வாறு கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் இழக்கப்படுவதை தவிர்க்க இருக்கிறோம். தொலைகாட்சியூடாகவோ இன்டர்நெட் ஊடாகவோ கற்க வாய்ப்பில்லாத பகுதி மாணவர்களுக்கு வானொலியூடாக கற்பிக்க இருக்கிறோம்.

இது தவிர தொலைக்கல்வியூடாக கற்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து கற்பதற்காக கற்றல் தொகுதிகளை வழங்க இருக்கிறோம். 2020 மூன்றாம் தவணைக்கான பாடவிதானங்களை உள்ளடக்கும் வகையில் இந்த கற்றல் தொகுதிகள் வழங்கப்படும். அதிபர்களினூடாக அவற்றை வழங்க இருக்கிறோம். இதனுடன் இணைந்ததாக 9 மாகாணங்களிலும் உள்ள கல்வி பணிப்பாளர்கள் , மாணவர்களின் கல்வி நடவடிக்கள் குறித்து கவனம் செலுத்தி வருகின்றனர் என்றார்.

Related Posts